கோவை: எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதலமைச்சார் ஆனார்? எப்படி தவழ்ந்து வந்தார் என்பதும் நாட்டிற்கு தெரியும் என கோவையில் செங்கோட்டையன் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
விஜய் சினிமாவில் தான் சிறந்த நடிகர், அரசியலில் நாங்கள் தான் சிறந்தவர்கள் என எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார். சினிமாவில் இருந்து எம்ஜிஆர் மூன்று முறை முதல்வர் ஆகியுள்ளார், ஜெயலலிதா 5 முறை முதல்வராக இருந்துள்ளார்.
திரைப்படத்தில் நடிப்பவர்கள் அரசியலுக்கு வர முடியும், வெற்றி பெற முடியும் என்ற வரலாற்றை இந்தியாவிற்கே எம்ஜிஆர், என்.டி.ஆர் ஆகியோர் உருவாக்கிக் காட்டினர்.
திமுக , தவெக இடையே தான் போட்டியே தவிர, அதிமுக என்ற இயக்கம் எடப்பாடி பழனிச்சாமி சொல்வதை போன்ற நிலை இல்லை.
எம்.ஜி.ஆர்-ஜெ., எங்கே?
பிரதமர் வந்த போது NDA கூட்டணி கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் பேனரில் இல்லை. யாரை நம்பி எடப்பாடி பழனிச்சாமி கட்சி நடத்துகின்றார்? எடப்பாடி பழனிச்சாமி முகத்திற்காகவா ஓட்டு போடுகின்றனர்? அந்தளவு செல்வாக்கு மிக்கவரா இவர்? எடப்பாடி பழனிச்சாமி எந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை அதை உணராமல் இருக்கின்றார்.
செல்வாக்கு மிக்க தலைவர் விஜய். மக்கள் விரும்பும் தலைவராக இருப்பவர் பற்றி பேசுவதை ஏற்க முடியாது. ஆண்டிற்கு 500 கோடி ரூபாயை விட்டு மக்களுக்காக பணியாற்ற களமிறங்கி இருக்கின்றார் விஜய்.
அதிமுக, திமுக என யார் வீட்டிற்கு சென்றாலும் அவர்களின் மனைவி, மகன், மகள் என அனைவரும் விஜய்க்குதான் வாக்கு என்று செல்லும் நிலை இருக்கின்றது.
40 % வாக்கு எங்களுக்கு இருக்கிறது. இதுவரை சொல்லாத வார்த்தையை இப்போது ஏன் எடப்பாடி சொல்லுகின்றார் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.
அப்போ எங்கே போனார்?
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது, தூத்துகுடியில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேரை குருவிகளைச் சுடுவது போன்று சுட்டு கொன்றார்கள். அப்போது நேரில் சென்று முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி பார்த்தாரா?
அங்கு 100 நாள் நடந்த போராட்டத்திற்கு அமைச்சர்கள் யாராவது பேச்சுவார்த்தைக்கு போனார்களா? இப்போது அதையும் இதையும் பேசிக்கொண்டு இருக்கின்றார். இவர் முதல்வராக இருந்த பொழுது தூத்துக்குடி சென்றிருக்க வேண்டும்.
ஜெயலலிதா தங்கி இருந்த கோடநாடு எஸ்டேட்டில் 2 கொலைகள் நடைபெற்றன. அந்த சம்பவம் காலையில்தான் தனக்கு தெரியும் என்கின்றார் அன்றைய முதல்வராக இருந்த எடப்பாடி. எடப்பாடி எப்படி முதலமைச்சார் என்பதும், எப்படி தவழ்ந்து வந்தார் என நாட்டிற்கு தெரியும். அப்படி இருக்கையில் விஜய்யை பற்றிப் பேசுவதற்கு அவருக்கு தகுதி இல்லை.
கடைசி பஞ்ச்
அதிமுகவில் இருப்பவர்கள், பல பேர் பல கருத்துகளை சொல்வதை போல நாங்கள் சொல்வதில்லை. அங்கு ஒவ்வொருவரும் ஒரு கருத்தைச் சொல்லுவார்கள். எங்களைப் பொருத்தவரை தலைவர் என்ன சொல்லுகிறாரோ அதன் அடிப்படையில் பயணம் மேற்கொண்டு இருக்கிறோம்.
அதிமுகவில் “தெர்மாகூலர்” (செல்லூர் ராஜு) பல்வேறு கருத்துகளைச் சொல்வதை போல நாங்கள் சொல்ல முடியாது. விஜய் நாளைய முதல்வர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.

