கோவை: கோவையில் 85 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து நகையை பறித்துச் சென்ற குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை சூலூர் அடுத்த பாப்பம்பட்டிபிரிவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (25). இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள், வழிப்பறி வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு சூலூர் பகுதியில் வசித்து வரும் 85 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி மூதாட்டியிடம் இருந்த 5 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றுள்ளார்.
இது குறித்து மூதாட்டி அவரது பேரனிடம் தெரிவித்ததை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலிசார் சூலூர் பகுதியில் சாகுல் ஹமீதை கைது செய்து அவர் மீது பாலியல் வன்கொடுமை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கானது கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரராஜ் கைது செய்யப்பட்ட சாகுல் ஹமீதை குற்றவாளி என தெரிவித்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சாகுல் ஹமீது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


