கோவை: அதிமுக தேமுதிக இடையிலான உறவை யார் உடைக்க நினைத்தாலும் அது நடக்காது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்…
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
‘மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அந்த தீர்மானத்தில் அதிமுக பற்றி 27வது தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
அதில் , துரோக அதிமுக என பயன்படுத்தியுள்ளனர். அது நாங்கள் இல்லை திமுக தான் இந்த நாட்டிற்கு துரோகம் செய்தது. அதிமுகவை பொருத்தவரை அம்மா ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்த போதும் சரி, அவர் மறைவிற்கு பிறகு நான் முதலமைச்சராக இருந்த போதும் அதிமுக ஆட்சியில் சிறப்பான திட்டங்களை நாட்டு மக்களுக்கு வழங்கினோம். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. இன்றைய தினம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தினம்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, வழிப்பறி நடக்கிறது. தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் இந்த செய்தி தான் பார்க்கப்படுகிறது. அப்படி மோசமான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் மாடல் ஆட்சி தான் துரோக ஆட்சி என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
அதோடு கல்விக் கொள்கை பற்றி குறிப்பிட்டதாக கேள்விப்பட்டேன். திமுக மத்திய அமைச்சரவையில் 16 ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தார்கள். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, ஐ.கே.குஜரால் மற்றும் தேவகவுடா பிரதமராக இருந்தபோது என 16 ஆண்டு காலம் மத்தியில் அதிகாரத்தில் இருந்தார்கள். அப்போது ஏன் கல்விக் கொள்கையில் இந்த திராவிட மாடல் அரசு, ஸ்டாலின் அரசு கவனம் செலுத்தவில்லை?
அப்பொழுதே கல்வியை மத்திய அரசு பட்டியலில் இருந்து மாநில அரசு பட்டியலுக்கு கொண்டு வந்திருக்கலாம். ஆட்சியில், அதிகாரத்தில் இருந்த போதெல்லாம் மக்களைப் பற்றி, மாணவர்கள் பற்றி கவலைப்படுவதில்லை.
ஆட்சி அதிகாரம் இல்லாதபோது வேண்டுமென்றே திட்டமிட்டு மற்றவர்கள் மீது பழி சுமத்துவது தான் திமுகவின் வாடிக்கை’ என்றார்.
முதல்வர் மதுரை வந்தபோது தூர்வாரப்படாத சாக்கடை திரையிட்டு மறைக்கப்பட்டது குறித்த கேள்விக்கு,
‘ஒரு மோசமான ஆட்சி என்பதற்கு இதுவே சான்று.. முதலமைச்சர் வரும்போது அவருக்கே பிடிக்காமல் தான் திரை போட்டு சாக்கடை கழிவுநீர் செல்கின்ற கால்வாயை தூர்வாராமல், மிக மோசமாக இருந்தது. அது அவர்களுக்கே பிடிக்காமல் தான் திரை போட்டு மறைத்தனர். அப்படிப்பட்ட அவல ஆட்சி தமிழகத்தில் உள்ளது’ என்ன பதிலளித்தார்.
ஆதவ் அர்ஜுனா அதிமுக குறித்து பேசியதற்கு, ‘அவரே ட்ரீட் போட்டு விட்டார்’ என்றார்.
தொடர்ந்து பேசியவர், ‘அதிமுக தேமுதிக இடையே சுமுகமான உறவு உள்ளது. அதனை உடைத்திட யார் நினைத்தாலும் முடியாது’ என தெரிவித்தார்.