கோவை: தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு சிறப்பான நிதி உதவி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவை டாடாபாத் பகுதியில் மக்கள் சேவை மையம் சார்பில் மோடியின் மகள் திட்டத்தின் கீழ் தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் இனிப்புகள் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு பெண் குழந்தைகளுக்கு தீபாவளி பரிசுகளை வழங்கினார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு மோடியின் மகள் திட்டத்தின் வாயிலாக கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் பத்தாயிரம் ரூபாய் கல்விக்காக உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் தீபாவளி நாட்களில் பட்டாசுகள் புத்தாடைகள் இனிப்புகள் வழங்கி வருவதாக தெரிவித்தார்.
மோடியின் மகள் திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக அந்த பெண் குழந்தைகள் பள்ளி கல்லூரி சேர்வதற்கான உதவிகளையும் கல்வி கட்டணத்திற்கான உதவிகளையும் செய்து வருவதாகவும் தெரிவித்தார். தான் பாஜகவில் தேசிய மகளிர் அணி தலைவர் ஆவதற்கு முன்பாக இருந்தே பிரதமர் மோடியின் பெயரில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு வருடமும் தந்தையை இழந்த பெண் குழந்தைகள் தன்னிடம் உதவி கேட்டு வரும் பொழுது மனம் கனத்து போவதாகவும் இந்த ஒரு சூழல் இருக்கக் கூடாது என்று இறைவனை பிராத்தித்து வருவதாகவும் கூறிய அவர் ஆனால் யதார்த்தத்தில் இளம் குழந்தைகள் தந்தைகளை இழக்கின்றார்கள் அந்த இழப்பிற்கு என்ன காரணம் என்று பார்க்கின்ற பொழுது மதுவின் கொடுமையால் தான் அதிகமான இறப்புகள் ஏற்படுவதாக குறிப்பிட்டார்.
தமிழகத்தில் இளம் விதவைகளின் கணக்கெடுப்பை நடத்தி அவர்களின் மறுவாழ்விற்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றுப்சட்டப் பேரவையில் கோரிக்கைகளை முன்வைத்து வருவதாகவும் தமிழக அரசு இம்மாதிரி தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு சிறப்பான நிதி உதவி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் நடிகை ஆர்த்தி கணேஷ், பார்க் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி அனுஷா ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



