கோவை: கோவை பெரியார் நூலகத்தில் கண் திருஷ்டி பலகை இருக்காது அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
கோவை காந்திபுரம் சாலை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் கட்டுமானப் பணிகளை பொதுப் பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,
பெரியார் நூலகக் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தரமாகவும் விரைவாகவும் கட்டுவதற்கு ஒப்பந்தக்காரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம் என்றும், ஆரம்ப கட்டத்தில் இருந்து அனைத்து பணிகளையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். கட்டுமானப் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய அரசு பொறியாளர்கள் நிரந்தரமாக பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்,” என்றார்.
பெரியார் நூலகத்தில் கண் திருஷ்டி பலகை வைக்கப்பட்டு இருப்பது குறித்த சர்ச்சைக்கு,
“ஒப்பந்தக்காரர்கள் தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் இந்தப் பலகையை வைத்து உள்ளனர். நான் ஒரு பெரியாரிஸ்ட். பகுத்தறிவாளனாக இருக்கும் நான் இதுபோன்ற செயல்களை ஏற்கமாட்டேன். கட்டிடப் பணிகள் முடிந்து அரசிடம் ஒப்படைக்கப்படும் போது இதுபோன்ற பலகைகள் எதுவும் இருக்காது. அரசு தரப்பில் இதை வைக்க வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை,” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும், அவிநாசி மேம்பாலப் பணிகள் குறித்து பேசிய அமைச்சர்,
“ரயில்வே கிராசிங் பகுதியில் அனுமதி தாமதமானாலும், தற்போது அனுமதி கிடைத்து பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. மேம்பாலத்திற்கு 8 ஏறு-இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒரு இடத்தில் மட்டும் நீதிமன்ற வழக்கு காரணமாக அனுமதி தாமதமாகி உள்ளது. அதையும் கண்காணித்து வருகிறோம். அவிநாசி மேம்பாலப் பணிகள் அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் நிறைவடையும்,” என்றார்.
சுரங்கப் பாதை அமைப்பது குறித்து தேவை ஏற்படும் பட்சத்தில் அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.