கோவை: இது டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்குமான தேர்தல் என்றும், இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணிதான் வெற்றி பெறும் என்று கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
கோவை நீலாம்பூரில் திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-
உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனுங்க தலைவரே சாவுக்கியமா? என்று கேட்டு மகிழ்ச்சி அடைய வைத்து விட்டீர்கள். 200 சதவீதம் வெற்றியை உறுதி செய்துவிட்டீர்கள். திமுக ஆட்சிக் காலத்தில் கோவை முக்கியமான மண். இந்தி திணிப்புக்கு எதிராக பொள்ளாச்சி மிகப்பெரிய அளவில் போராடியது. வெற்றிக்கு அடித்தளமாக கோவை இருக்கும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்து உள்ளார். இந்த ஆற்றல் தான் எதிரிகளின் தூக்கத்தைக் கெடுக்கிறது. செந்தில் பாலாஜி எதிராளிக்கு சிம்ம சொப்பனமாக உள்ளார். எதற்கும் அடிபணியாதவர் செந்தில் பாலாஜி. அவர் திமுகவிற்கு உண்மையாக உழைத்து வருகிறார்.
உங்களை உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி, உங்களைப் பார்த்து நானும் உற்சாகம் அடைய வேண்டும். உங்களுடைய கான்பிடன்ஸ் பார்த்து என்னுடைய கான்பிடன்ஸ் அதிகரித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே வரும் சட்டமன்றத் தேர்தலில் நமது கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும்.
கோவைக்கு திட்டங்கள்
கோவையில் ஐடி பூங்கா, செம்மொழிப் பூங்கா, ஜிடி நாயுடு மேம்பாலம், விசைத்தறி நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களோடு சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இங்கு உலகத்தரத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைய உள்ளது. பிரமாண்ட நூலகம் திறப்பு விழாவிற்கு தயாராகி உள்ளது. கோவைக்கு 75 மின்சாரப் பேருந்துகள் வர உள்ளன. கோவையின் வளர்ச்சிக்கு திட்டங்கள் போடப்பட்டு உள்ளன.
இந்த திட்டங்களை சொன்னாலே அதிக அளவில் வாக்குகள் நாம் வாங்கி விடலாம். உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்து கொடுக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. ஒவ்வொருவரும் 40 முதல் 50 வாக்குகள் வாங்கிக் கொடுக்க வேண்டும். அந்த குறிக்கோள் உங்களிடம் வேண்டும். வரும் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது நிச்சயம். அதற்கு மேலும் தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெற வேண்டும்.
மக்களை 5 முறை நேரில் சந்தித்து பேச வேண்டும். வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவை வந்துள்ளன. ஆனாலும், வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்பது தான் பயன் கொடுக்கும். சமூக வலைதளங்கள் கை கொடுக்காது. திமுக குடும்பமாக இருந்தாலும், திமுகவுக்கு வாக்கு அளிக்காத குடும்பமாக இருந்தாலும் கடைசி நிமிடம் வரை மக்களைச் சந்திக்க வேண்டும். மக்களை மரியாதையாக அணுக வேண்டும்.
வாக்காளர்கள் நமக்கு வாக்கு அளிக்கும் வரை நமக்கு ஓய்வு கூடாது. இன்ப, துன்பங்களை மக்களுடன் இருந்து அவர்களுக்குத் தேவையானதை நாம் செய்ய வேண்டும். இந்தியாவில் எங்கும் செய்ய முடியாத திட்டங்களை நாம் செயல்படுத்தியுள்ளோம். திட்டங்களைப் பட்டியலிட்டுச் சொல்லுங்கள். அது தான் திராவிட மாடல்.
நம்முடைய சாதனைகள் அடங்கிய புத்தகங்களை உங்களிடம் கொடுத்து உள்ளோம். அதைப் படித்து மக்களிடம் சொல்ல வேண்டும். திராவிட மாடல் 2.0 அமைய ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். மக்களிடம் நமக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு எங்கு திரும்பினாலும் திமுக தான், உதயசூரியன் தான் இருக்க வேண்டும்.
வளர்ச்சியை விரும்பவில்லை
எல்லாருக்கும் எல்லாம் என்று வெறும் வாய் வார்த்தையாக சொல்லாமல் பார்த்துப் பார்த்து செய்து வருகிறோம். பாஜக நமது வளர்ச்சியை விரும்பவில்லை. அதிமுக பாஜகவின் கிளைக் கழகமாக செயல்பட்டு வருகிறது. மோடிக்கு திடீரென ஜெயலலிதா மீது பாசம் வந்துவிட்டது. பாஜக தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை. அதனால் தான் ஜெயலலிதா புராணம் பாடிக் கொண்டு இருக்கிறார் பிரதமர் மோடி.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவைக்கு மெட்ரோ அனுமதி ஏன் வழங்கவில்லை? மதுரைக்கு ஏன் வழங்கவில்லை? தமிழ்நாட்டிற்கு மெட்ரோ அனுமதி கொடுக்க மறுப்பது ஏன்? சென்னை மெட்ரோவிற்கு முழுமையான நிதியை ஏன் வழங்கவில்லை? தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதியை எப்போது கொடுப்பீர்கள்?
தமிழனுக்கு துரோகம் செய்பவர்களை மக்கள் முன்பு அம்பலப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டிற்கு வன்மத்தைச் செய்யும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. நீண்ட வருடங்களாக திமுக கூட்டணி கொள்கை உறுதியுடன் தொடர்கிறது. இதுவே வரலாற்றில் முதல் முறை. ஆனால், சர்க்கஸ் முடிந்தவுடன் எப்படி கூடாரம் பிரிப்பார்களோ, அப்படி தான் இவர்கள் கூட்டணி. தேர்தல் முடிந்தவுடன் பிரிந்து விடுவார்கள். பாஜக கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி.
திமுக அஞ்சாது
பத்து தோல்வி பழனிசாமி, மைண்ட் வாய்ஸ் என நினைத்து சத்தமாக பேசி வருகிறார்கள். பழனிசாமிக்கு பிரச்சினை வரும் போது கார் மாறி, கார் மாறி போய் சரணடைவது தான் வேலை. அரவிந்த் கெஜ்ரிவால் மீது பொய் வழக்கு போடப்பட்டது. மீண்டும் டெல்லியில் தேர்தல் நடத்த முடியுமா? சிறையில் இருந்த நாட்களைத் திரும்பக் கொடுக்க முடியுமா?
பாஜக இதை தான் தமிழ்நாட்டில் செய்யப் பார்க்கிறது. ஆனால் அந்த உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் திமுக பயப்படாது. பாஜகவிற்கு எதிராக அனைத்து மக்களும் நின்று வெற்றி பெற வேண்டும். நாம் போராடுவது கூட்டணி வெற்றிக்காக இல்லை, தமிழ்நாட்டின் வெற்றிக்காக. தமிழ்நாடு பாஜகவிற்கு என்றும் தலைகுனியாது. இந்தத் தேர்தல் டெல்லிக்கும், தமிழ்நாட்டிற்குமான தேர்தல். இதில் தமிழ்நாடு அணிதான் வெற்றி பெறப் போகிறது.


Karumbukadai road 5 years not road sowkar nagar and madeena nagar Kabir counsiler not able road why??????