கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நிலைத்தன்மை கொண்ட வேளாண்மைக்கான பொறியியல் தீர்வுகள் என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
“எதிர்காலத்திற்கான நிலைத்தன்மை கொண்ட வேளாண்மையை உருவாக்கும் பொறியியல்” (Engineering Agriculture for Resilient Future) என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அண்ணா அரங்கில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில்
விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், தொழில்துறை நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு நிலைத்தன்மை மற்றும் வேளாண்மை வளர்ச்சிக்கான புதுமையான பொறியியல் தீர்வுகள் குறித்து கலந்துரையாடினர்.
தமிழ்நாடு வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு குழுமத்தின் (TNAPEX), மேலாண்மை இயக்குநரும் முதன்மை நிர்வாக அதிகாரியுமான முனைவர் அழகுசுந்தரம் தொடக்க உரையை வழங்கி, வேளாண்மை பொறியியல் தொழில்நுட்பங்கள் வேளாண் மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துவதிலும், அறுவடைக்கு பிந்தைய மேலாண்மையை மேம்படுத்துவதிலும், வேளாண் பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிப்பதிலும் முக்கிய பங்காற்றுவதை எடுத்துரைத்தார்.
மேலும் நவீன தொழில்நுட்பங்கள், திறமையான செயலாக்க முறைகள் மற்றும் புதுமையான பொறியியல் தீர்வுகளை பயன்படுத்துவதன் மூலம் வேளாண் பொருட்களின் நிலைத்தன்மை, தரம் மற்றும் உலகளாவிய போட்டித்திறனை உயர்த்த முடியும் என அவர் குறிப்பிட்டார்.
முக்கிய உரையை ரெனைய்சன்ஸ் பவர் புரொடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், நிறுவனத்தின் இயக்குநரும் செயலாளருமான முனைவர் ராஜ்குமார் வழங்கினார். வேளாண்மையில் உருவாகும் புதிய சவால்களை சமாளிக்க தொழில்நுட்ப முன்னேற்றங்கள், இயந்திரமயமாக்கல் மற்றும் தொழில்துறை சார்ந்த புதுமைகள் மிக அவசியம் என்பதை அவர் தனது உரையில் எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மைர் முனைவர் ராஜ்குமார், நவீன வேளாண்மையில் பொறியியல் துறையின் முக்கியத்துவத்தை விளக்கி, எதிர்கால வேளாண் சவால்களை சமாளிக்க கூட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் அவசியம் என வலியுறுத்தினார்.
இந்த தொடக்க நிகழ்வில் கோயம்புத்தூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மையர் முனைவர் வெங்கடேச பழனிசாமி, தோட்டக்கலை கல்லூரியின் முதன்மையர் முனைவர் வெங்கடேசன், முதுநிலைப் படிப்புகள் (SPGS) முதன்மையர் முனைவர் பாபு மற்றும் மாணவர் நல மையத்தின் (CSW) முதன்மையர் முனைவர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் துறைசார் ஒத்துழைப்பையும் புதுமைகளையும் ஊக்குவித்தனர்.
இந்த தொடக்க விழாவில் மாநாட்டு நினைவிதழ் சிறப்பு விருந்தினர்களால் வெளியிடப்பட்டது. மாநாட்டு ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பு செயலாளர்களாக முனைவர் பாலாஜி கண்ணன் மற்றும் முனைவர் தியாகராஜன், இணை ஒருங்கிணைப்பு செயலாளர்களாக முனைவர் அருணா தேவி மற்றும் முனைவர் மோகன் குமார் ஒருங்கிணைத்தனர்.

