கோவை: வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை வனக் கோட்டம்,போளுவாம்பட்டி வனச்சரகம், வெள்ளியங்கிரி ஆண்டவர் மலை கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 7 மலைகள் ஏறி சென்று சிவனை வழிபட்டு வருகின்றனர்.
மலையேற்றம் என்பதால் வனத்துறையினர், காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மருத்துவ குழுவினரும் பக்தர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தயார் நிலையில் உள்ளனர்.
அதே சமயம் மலையேற்றத்தின் போது சிலர் உடல் நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்கிறது.
மலையேற்றம் தொடங்கியது முதல் ஒரு இளைஞர் மற்றும் ஒரு முதியவர் என்று இருவர் வெள்ளியங்கிரி மலையில் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது நபரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையைச் சேர்ந்த பக்தர் ஹரிதாஸ் என்பவர் முதல் மலைக்கு செல்லும் வழியில் குரங்கு பாலம் அருகில் சுயநினைவின்றி இருப்பதாக நேற்றிரவு சுமார் 11.30 மணி அளவில் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் வனப்பணியாளர்கள் மற்றும் டோலி தூக்கும் சுமைப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சுயநினைவின்றி இருந்த ஹரிதாஸை மீட்டு பூண்டி அடிவாரத்திற்கு வந்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்குழுவினர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரது உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆலாந்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

