கோவை: கோவையில் டெலிவரி ஊழியர்களுக்காக மீண்டும் ஒரு ஸ்பெஷல் ஓய்வறை திறக்கப்பட்டுள்ளது.
கோவையில் ஆன்லைன் ஸ்டோர்கள் மற்றும் உணவு டெலிவரி நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள், அன்றாடம் அலைந்து திரிந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கென்று தனி ஓய்வு அறை இல்லாததால், கழிப்பறை, மொபைல் சார்ஜிங் என்று பல்வேறு பிரச்சினைகளை அனுபவித்து வந்தனர்.
இதனிடையே தொழிலாளர்கள் ஓய்வெடுக்கவும், அத்தியாவசிய வசதிகளைப் பயன்படுத்தவும் ஒரு பொதுவான இடத்தை வழங்கும் வகையில் கோவையில் இணையத் தொழிலாளர் கூடம் அமைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் இணையத் தொழிலாளர்களுக்காக ரூ.16.82 லட்சம் மதிப்பில் ஓய்வு அறை அமைக்கப்பட்டது. இதனை கோவை எம்.பி., ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதனிடையே தற்போது மற்றொரு ஓய்வறையும் தொடங்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.புரம் டிபி ரோட்டில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இணையத் தொழிலாளர் கூடம் மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொதுக் கழிப்பிடம் ஆகியவற்றை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி திறந்து வைத்தார்.
இதில் கழிப்பறை, குளிர்சாதன வசதி, மின்சாரம் சார்ஜ் செய்யும் வசதி, இலவச Wifi வசதி மற்றும் வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.



