கோவை: அரசியல் கட்சிகள் நிர்வாகிகள் முன்னிலையில் வாக்கு பதிவு எந்திரங்கள் சரி பார்க்கப்பட்டது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த வருடம் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு தேவையான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் முடிக்கி விட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் தீவிர வாக்காளர் திருத்தம் பணி, இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு ஓட்டுப் பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் அடங்கிய பெட்டிகள் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் வளாகத்தில் உள்ள மின்னணு வாக்கு பதிவு பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
அந்த மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டவை ஆகும். இந்த மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் தான் சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
எனவே அந்த எந்திரங்களை ஆய்வு செய்து அவற்றை சரி பார்க்கும் பணி இன்று தொடங்கியது. கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான பவன்குமார் இந்த மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் சரி பாரக்கும் பணியை பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.
அதன் பிறகு ஆட்சியர் செய்தியாளர்களை சந்திக்கும் போது, கோவை மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று தொடங்கப்பட்டு உள்ளது.
மொத்தம் 19 ஆயிரத்து 521 மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் , பேலட் யூனிட்ஸ் வி.வி. பேட், மற்றும் கண்ட்ரோல் யூனிட் எந்திரங்கள் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகின்றன.
இதில் 13 இன்ஜினியர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்தப் பணி ஒரு மாதம் வரை நடைபெறும். இந்த வாக்குப் பதிவு எந்திரங்கள் அனைத்தும் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்பட்டவை ஆகும்.
இதில் எந்திரங்களை சரிபார்த்து அதில் பழுது இருந்தால் அவற்றை இன்ஜினியர்கள் சரி செய்வார்கள். பழுது உள்ள எந்திரங்கள் மாற்றப்படும். கூடுதல் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் தேவை குறித்து தேவைப்பட்டால் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்து வர வரவழைக்கப்படும் என கூறினார்.



