கோவை: நஞ்சப்பா சாலையில் குடிநீர் குழாய் உடைந்ததால் அதிகப்படியான நீர் வெளியேறி வருகிறது.
கோவை மாநகராட்சியில் முக்கிய சாலைகளில் ஒன்றான நஞ்சப்பா சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அதிக அளவிலான நீர் வெளியேறி வருகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் அங்குள்ள கடைக்காரர்களும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

அவிநாசி சாலை பழைய மேம்பாலத்தில் இருந்து காந்திபுரம் செல்வதற்கும் காந்திபுரத்தில் இருந்து அவிநாசி சாலையை வந்தடைவதற்கும் இந்த சாலை முக்கிய சாலையாக உள்ளது. இங்கு ஏராளமான எலக்ட்ரிகல் கடைகள், வீட்டு உபகரண கடைகள் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட காரணத்தினால் அதிக அளவிலான தண்ணீர் ஆறு போல் சாலைகளில் ஓடி வருகிறது. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் சக்கரங்கள் மூழ்கும் அளவிற்கு நீர் வழிந்தோடி செல்வதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் மேலும் அங்கு கடை வைத்திருப்பவர்களும் லோடு ஏற்றி இறக்க முடியாமல் சிரமமடைந்து உள்ளனர்.
வழக்கமாக மழைக்காலங்களில் அதிக அளவு நீர் வெளியேறும் என்றும் தற்பொழுது குடிநீர் குழாய் உடைந்து அதிகளவு தண்ணீர் வெளியேறுவதால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



