கோவை: SIR குறித்த சந்தேகங்களுக்கு இலவச தொடர்பு எண் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் SIR எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. SIR படிவங்களை அலுவலர்கள் வீடுவீடாக வழங்கி பூர்த்தி செய்த பின் திரும்ப பெற்று வருகின்றனர். இது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோலங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அரசு பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டு கோலங்கள் மூலம் SIR குறித்தும் தேர்தல் குறித்தும் வாக்களிப்பது அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர். இதனை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் நேரில் பார்வையிட்டார்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோவை மாவட்ட ஆட்சியர், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இது குறித்து கோவை மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோலங்கள் வரையப்பட்டுள்ளதாகவும் மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

இது குறித்து பொதுமக்களுக்கும் வாக்காளர்களுக்கும் என்ன சந்தேகம் இருந்தாலும் 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உதவி மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வால்பாறையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், இது குறித்து முழு விசாரணை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை CEO மற்றும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கபடும் என்றார். மேலும் இது குறித்து காவல் துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.


