கோவை: கோவையில் பல்வேறு பகுதிகளுக்கு மிரட்டல் விடுத்து, தங்களை அலையோ அலையென அலைக்கழிக்கும் நபரைப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
கோவையில் உள்ள முக்கிய பகுதிகள், பொது இடங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மர்ம நபர்கள் சிலர் பல மாதங்களாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விமான நிலையம், பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு தொடர்ந்து மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன.
குறிப்பாக சில பள்ளிகளுக்கு அடிக்கடி இதுபோன்ற மிரட்டல் இமெயில்கள் வருகின்றன. இதனால், குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பதைபதைக்கின்றனர்.
இதனிடையே நேற்று ஆட்சியர் அலுவலகத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இன்றும் ஆட்சியர் அலுவலகத்திற்கும், மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கோவை மாநகர போலீசின் வெடிகுண்டு நிபுணர் பிரிவினர் இரு அலுவலகங்களிலும் சோதனை நடத்தினர். பின்னர் அது புரளி என்பது தெரியவந்தது.
இதுபோன்று தொடர்ந்து வரும் மிரட்டல்களால் அரசுப் பணிகளில் தொய்வு ஏற்படுவது மட்டுமல்லாது, போலீசாருக்கும் பெரிய தலைவலி உண்டாகிறது.

கடந்த சில மாதங்களாக இந்த வேலையைச் செய்து, போலீசாரை அலைக்கழிக்கும் அந்த சைபர் கிரைம் மோசடி ஆசாமியை இதுவரை போலீசாரால் பிடிக்க முடியவில்லை.
கோவையில் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இது போன்ற மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகள், விமான நிலையங்கள், எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் வீட்டிற்கும் தொடர்ந்து இதுபோன்ற அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
மிரட்டல் விடுத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் அந்த நபரை தமிழக போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துள்ளது.