கோவை : சந்தேகத்தால் தகராறு கணவரின் மர்ம உறுப்பை அறுத்து சித்திரவதை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
அசாம் மாநிலம் நகன் மாவட்டத்தை சேர்ந்தவர் பிதான் ஹசாரிகா (33). இவரது மனைவி ஜிந்தி (36). இவர்கள் குடும்பத்துடன் கோவை கணபதி பகுதியில் தங்கி உள்ளனர்.
பிதான் ஹசாரிகா அத்திபாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிளம்பராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ஜிந்தி தனது கணவர் பிதான் ஹசாரிகாவிற்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பிதான் ஹசாரிகா தனக்கு அவ்வாறு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியும் அவரது மனைவி ஜிந்தி கேட்காமல் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் பிதான் ஹசாரிகா வேலையை முடித்துவிட்டு மது அருந்தி வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அறைக்கு சென்று படுத்து தூங்கினார். அப்போது திடீரென இரவு ஜிந்தி அவரை எழுப்பி விட்டு இனி நீ எங்கும் வேலைக்கு செல்ல வேண்டாம், வீட்டில் இருந்த போதும் என தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரம் அடைந்த ஜிந்தி, சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து வந்து பிதான் ஹசாரிகாவின் மர்ம உறுப்பை அறுத்து சித்ரவதை செய்து உள்ளார்.
பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்து கதவை பூட்டி சென்றார். ரத்த வெள்ளத்தில் பிதான் ஹசாரிகா வலியால் அலறி துடித்துள்ளார்.
அவரின் சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் ஓடி வந்து கதவைத் திறந்து பிதான் ஹசாரிகாவை மீட்டனர். தொடர்ந்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பிதான் ஹசாரிகா சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிதான் ஹசாரிகாவின் மனைவி ஜிந்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

