கோவை: கோவையில் போலி நகையை அடகு வைத்ததால் பெண் வியாபாரியை அடித்துக்கொலை செய்த நகை அடகு கடை உரிமையாளர் போலீசில் சரணடைந்தார்.
ரத்தினபுரி ஜி.பி.எம். நகரை சேர்ந்தவர் ராஜாராம் (53). இவர் சின்ன மேட்டுப்பாளையத்தில் நகை அடகு கடை மற்றும் மிட்டாய் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 8ம் தேதி ராஜாராம் அடகு கடையில் இருந்தபோது பெண் ஒருவர் வந்தார். அவர் மோதிரம் ஒன்றை அடகு வைத்து ரூ.30 ஆயிரம் பெற்றார். அப்போது தனது பெயர் சுமதி என்றும், சின்ன மேட்டுப்பாளையத்தில் ஜவுளி வியாபாரம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மறுநாள் மீண்டும் அதே பெண் வந்தார். அவர் தனது ஜவுளி தொழிலை விரிவுபடுத்த பணம் தேவைப்படுவதாக கூறி வளையலை அடகு வைத்து ரூ.32 ஆயிரம் பெற்றுச்சென்றார்.
இதைத்தொடர்ந்து மீண்டும் கடந்த 12ம் தேதி வந்த அந்தப் பெண் தனக்கு அவசரமாக பணம் தேவை எனக்கூறி நகைகளை கொடுத்து ரூ.75 ஆயிரம் பெற்றுக்கொண்டு வேகமாக சென்றுவிட்டார். இந்த வகையில் அவர் மொத்தம் ரூ.1.37 லட்சம் பெற்றுள்ளார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ராஜாராம் அவர் கொடுத்த நகைகளை எல்லாம் சோதனை செய்து பார்த்தார். அப்போது அவை அனைத்தும் போலி என தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ராஜாராம் அந்த பெண்ணை தேடினார். அவர் கொடுத்த முகவரிக்கு சென்றபோது போலியான முகவரி கொடுத்திருப்பது தெரிந்தது. இதனை ராஜாராம் தனது நண்பர்கள் சிலருடன் தெரிவித்து அந்த பெண்ணை தொடர்ந்து தேடி வந்தார்.
இந்நிலையில், ராஜாராம் தன்னை தேடுவதை அறியாத அந்த பெண் நேற்று முன்தினம் மீண்டும் போலி நகையை அடகு வைக்க கடைக்கு வந்தார். தான் தேடிய பெண்ணே தன்னை தேடி வந்ததால், அந்த பெண்ணை பிடித்து வைத்த ராஜாராம் தனது நண்பரான மகேந்திரன் மற்றும் சிலருக்கு போன் செய்து கடைக்கு வரவழைத்தார்.
அங்கு வந்த அவர்கள் அந்த பெண்ணை சரமாரியாக அடித்து உதைத்தனர். தொடர்ந்து அவரை அத்திப்பாளையம் ரோடு தண்ணீர் டேங்க் அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கூட்டி சென்றனர். அங்கு பிவிசி பைப், கட்டையால் தாக்கினர்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அந்த பெண் அங்கேயே மயங்கி சரிந்து உயிரிழந்தார். இதனால் பயந்து போன 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
எப்படியும் போலீஸ் பிடித்து விடுவார்கள் என நினைத்த நகை அடகு கடை உரிமையாளர் ராஜாராம் நேற்று கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
அங்கு அவர் பெண் ஒருவரை அடித்துக்கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு சென்று பெண் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்தனர்.
அப்போது கொலை செய்யப்பட்ட பெண் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகாவை சேர்ந்த பெரியசாமி மனைவி சுதா (39) என்ற ஜவுளி வியாபாரி என தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மகேந்திரன் உட்பட சிலரை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

