கோவை: கோவையில் சமையல் செய்தபோது ஆடையில் தீப்பிடித்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் பகுதியை சேர்ந்தவர் பத்ருதீன் (40). இவரது மனைவி சாய்ரா பானு (38). கடந்த 8ம் தேதி சாய்ரா பானு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவரது ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீ பரவியது. வலியால் அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது கணவர் பத்ருதீன், மனைவி மீது பிடித்த தீயை அணைக்க முயன்றார். அப்போது அவருக்கும் உடலில் காயம் ஏற்பட்டது.
அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று சாய்ரா பானு பரிதாபமாக உயிரிழந்தார்.
பத்ருதீன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கரும்புக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சமையல் செய்த போது தீப்பிடித்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

