கோவை: கோவை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊசி, மருந்துகளை திருடிய வாலிபரை மடக்கிய நர்சுகள், அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை அரசு தலைமை மருத்துவமனையில் கோவை மட்டுமல்லாது ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
600க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் புறநோயாளிகளாக பலர் சிகிச்சை பெற்று திரும்புகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள பெண்கள் நரம்பியல் சிகிச்சை பிரிவில் நேற்று அதிகாலை வாலிபர் ஒருவர் உள்ளே நுழைந்தார்.
அங்குமிங்கும் சுற்றித் திரிந்த அவர் திடீரென நியூரோ வார்டுக்குள் புகுந்து ஊசி மற்றும் மருந்துகளை திருட முயன்றார். இதனைப் பார்த்த பணியில் இருந்த நர்சுகள் மருத்துவமனை செக்யூரிட்டி உதவியுடன் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.
உடனடியாக மருத்துவமனை இருப்பிட அதிகாரி சரவண பிரியாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர் போத்தனூர் குறிச்சி பிரிவை சேர்ந்த பைசல் ரகுமான்(26) என்பது தெரியவந்தது.
ஷோபா பழுது பார்க்கும் வேலை செய்து வந்துள்ளார். மருந்து கடையில் ஊசி, மருந்து கேட்டு கொடுக்காததால் மருத்துவமனைக்குள் புகுந்து அவற்றை எடுக்க முயன்றதாக போலீசில் கூறியுள்ளார்.
அவரிடமிருந்து 9 ஊசிகள், நரம்புகளுக்கு போடப்படும் மருந்து பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் போதை ஊசி போடுவதற்காக திருட முயன்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். பின்னர் கைதான பைசல் ரகுமான் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
போதை படுத்தும்பாடு
சந்தானம் காமெடியில்,
“எத்தனையோ கடையில் திருடியிருக்கேன். மெடிக்கல் ஷாப்பில் திருட வெச்சிட்டியே”
என்ற ஒரு வசனம் வரும், போதை படுத்தும்பாட்டில், வாலிபர் மருத்துவமனைக்குள் புகுந்து ஊசி மருந்துகளைத் திருடி சிக்கிய சம்பவமும் அதேபோல் அமைந்துள்ளது.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈