கோவை: மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயரின் உரிமை நிதி ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதில் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கான ஓய்வறை அமைத்து தரப்படும் என அறிவிப்பு வெளியிட்ட மேயர் ரங்கநாயகியை நேரில் சந்தித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சி மன்ற சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேயரின் உரிமை நிதியிலிருந்து ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்காக குளியலறையுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்கப்படும் என மேயர் அங்கநாயகி அறிவித்தார்.
தொடர்ந்து, அதற்கான சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மாநகராட்சி மேயர் ரங்கநாயகியை நேரில் சந்தித்து தங்களுக்கான ஓய்வவறை கட்ட நிதி ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
அப்போது, பேசிய ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோவை மண்டலத்தில் 66 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் அதில் 100 க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணியாற்றுவதாகவும் கூறினர்.
தற்போது வரை தங்களுக்கான ஓய்வறை என்பது இல்லாமல் இருக்கக்கூடிய சூழலில் குளியலறையுடன் கூடிய ஓய்வறை கட்டித் தரப்படும் என மேயர் அறிவித்தது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அதன் காரணமாகவே அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதேபோல் நேற்றைய தினம் வெளியிட்டப்பட்டுள்ள அறிவிப்புக்கு ஏற்ப விரைவில் ஓய்வறைகள் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் துவங்கும் என கூறிய மேயர் ரங்கநாயகி, விரைவில் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி ஐந்து மண்டலங்களிலும் ஓய்வறைகள் எங்கு அமைக்கலாம் என ஆலோசித்து அங்கு கட்டுமான பணிகள் துவங்கும் என்றார்.