கோவை: பயிற்சி நிறைவு செய்த 125 பேர் போலீசார் கோவை மாநகர போலீசில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சீருடை தேர்வாணையம் சார்பில், தேர்வு செய்யப்பட்ட 2ம் நிலை பயிற்சி காவலர்களுக்கு 7 மாதங்கள் போலீஸ் பயிற்சி பள்ளியில் பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆயுதப் பயிற்சி, அணிவகுப்பு பயிற்சி, கலவர தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிகள் முடிவடைந்த பின்னர் பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியிலிருந்து பல்வேறு மாவட்ட ஆயுதப்படைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
அவ்வாறு பயிற்சி நிறைவு செய்த 125 பேர் கோவை மாநகர ஆயுதப்படைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று கோவை வந்து பணியில் சேர்ந்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி நிறைவு செய்த போலீசார் பிரித்து அனுப்பப்படுவார்கள். அவ்வாறு வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து 125 பேர் தேர்வு செய்யப்பட்டு கோவை மாநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஆயுதப்படையில் இருந்து மாநகர பணிக்கு பயன்படுத்தப்படுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.