கோவை: கோவையில் நடப்பு ஆண்டுல் 200 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கோவை மாநகர போலீசார் குற்றச்சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் படி முதற்கட்டமாக வரலாற்று பதிவேட்டில் உள்ள ரவுடிகள், ஏ, ஏ பிளஸ், ரவுடிகளை சென்னை மாநகர போலீஸ் சட்டத்தின் கீழ் மாநகரில் இருந்து வெளியேறப்பட்டனர்.
அதன்படி, கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை 158 ரவுடிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த உத்தரவை மீறி மாநகருக்குள் இருந்த ரவுடிகள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதேபோல சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் 17 ஏ பிளஸ் ரவுடிகளின் ஜாமீனை ரத்து செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தொடர்ந்து குற்றச்சம்பங்களில் ஈடுபட்டு வருபவர்கள் மீது மாநகர போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவ்வாறு கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரை 200 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “ரவுடிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது சமூகத்திற்கு ஆபத்தான அறிகுறியாகும். எனவே குற்றவாளிகள் ஜாமீன் பெறுவதைத் தடுக்க குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சில குற்றவாளிகள் ஜாமீன் பெற்று வெளியே வந்து பாதிக்கப்பட்டவர்களை வழக்குகளைத் திரும்பப் பெற அச்சுறுத்துகிறார்கள். ஆதாரங்களை அழிக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்வதைத் தடுக்க குண்டர் சட்டத்தைப் பயன்படுத்துவது அவசியமாகிறது.
இதுபோன்ற குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பது நகரத்தில் அமைதியை நிலை நாட்ட உதவுகிறது. இவ்வாறு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவது குற்றவாளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும். ஏனெனில் அவர்கள் குறைந்தது 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை சிறையில் அடைக்கப்படுவார்கள்.” என்றனர்.
கோவை மாநகரில் கடந்த 2015ம் ஆண்டு 67 பேர் மீதும், 2016ம் ஆண்டு 62 பேர் மீதும், 2017ம் ஆண்டு 80 பேர் மீதும், 2018ம் ஆண்டு 68 பேர் மீதும், 2019ம் ஆண்டு 84 பேர் மீதும், 2020ம் ஆண்டு 76 பேர் மீதும், 2021ம் ஆண்டு 70 பேர் மீதும், 2022ம் ஆண்டு 87 பேர் மீதும், 2023ம் ஆண்டு 83 பேர் மீதும், 2024ம் ஆண்டு 133 பேர் மீதும், நடப்பாண்டு ஜனவரி முதல் தற்போது வரை 200 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகமாகும்.


