கோவை: கோவை மாநகரப் பகுதிகளில் 2,000 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த மாநகராட்சியுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறியதாவது:-
கோவை மாநகரப் பகுதிகளில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் புதிய வாகனங்கள் வருகின்றன. இதனால் போக்குவரத்தில் நெரிசல் அதிகரித்து வருகிறது. இருந்த போதும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
குறிப்பாக மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி அருகே கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் முடிவு பெற்றால் அந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும்.
அதேபோல மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் இந்த போக்குவரத்து நெரிசலை சீர் செய்வதற்கான பணிகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம்.
கோவை மாநகரப் பகுதிகளில் 2,000 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த கோவை மாநகராட்சியுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலம் இதனை இணைக்க உள்ளோம்.
மேலும் பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஒருங்கிணைத்து மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் எங்கேயும் கேபிள்கள் துண்டிப்பு ஏற்பட்டால் உடனடியாக அதனை சீர் செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். என்றார்.