கோவை: எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் 2026 கேள்விக்குறி தான் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பழைய ஓய்வூதியம், ஊதிய உயர்வு, பணி உயர்வு, பணி நிரந்தம், காலி பணியிடங்களை நிரப்புதல், பணிவரன்முறை படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல மாதங்களாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி இன்று மாநிலம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் முறையீட்டு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கை முழக்கங்களையும் தமிழக அரசுக்கு கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.
இது குறித்து பேட்டி அளித்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மலர்விழி, முதலமைச்சர் ஆட்சிக்கு வரும்பொழுது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வேன், காலி பணியிடங்களை நிரப்புவேன், உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அறிவித்த நிலையில் நான்கரை ஆண்டுகளான பிறகும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் எங்களது கோரிக்கைகளை பற்றி அமைச்சர் அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டு உள்ளதாக தெரிவித்தார்.
இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் என வலியுறுத்திய அவர் டெட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். நாங்கள் உருவாக்கிய அரசு எங்களை பாதுகாக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டுமே தவிர எங்களது வாழ்வாதாரத்தை தொலைக்க கூடாது என்றார்.
டெட் தேர்வு அரசு ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினாலும் தனியார் பள்ளிகளில் இருக்கக்கூடிய ஆசிரியர்களும் எங்களை போன்றவர்கள் தான் என தெரிவித்தனர். அதே சமயம் சட்டமன்ற உறுப்பினரோ அமைச்சரோ ஐந்தாண்டு காலம் ஆட்சியில் இருக்கின்ற பொழுது திடீரென ஒரு தேர்வு எழுதி விட்டு மீண்டும் அமைச்சராகுங்கள் என்று கூறினால் எப்படி இருக்கும் என்றும் கேள்வி எழுப்பினார்.
இது குறித்து மீண்டும் முதலமைச்சர் குழு அமைத்து ஆலோசிப்போம் என்று கூறினால் எங்களது கூட்டத்தில் எந்த ஒரு முடிவையும் எடுப்போம் எனவும் பழைய ஓய்வு ஊதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் அமல்படுத்தப்படவில்லை என்றால் 2026 கேள்விக்குறியாக தான் இருக்கும் எனவும் கூறினார்.