கோவை: கவுண்டம்பாளையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் அஞ்சல் துறையின் புக்கிங் கவுன்டர் செயல்படும் என்று அஞ்சல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கவுண்டம்பாளையம் தேமையன் வீதியில் அஞ்சல் துறையின் வாடிக்கையாளர்களின் தேவைகனை கருத்தில் கொண்டு 24 மணி நேரமும் செயல்படும் புக்கிங் கவுன்டர் செயல்பட துவங்கியுள்ளது. இந்த கவுன்டர் 24 மணி நேரமும் வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது.
இங்கு இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் விரைவு தபால், பார்சல்கள் அனுப்பும் வசதிகள் மற்றும் வெளிநாடுகளுக்கும் அனைத்து வகையான தபால் மற்றும் பார்சல்கள் அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து பகுதிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பார்சல்களை பேக்கிங் செய்து பாதுகாப்பாக அனுப்பும் வசதிக்காக பேக் போஸ்ட் சென்டரும் இங்கு செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் தாங்கள் அனுப்ப வேண்டிய பொருட்களை மட்டும் கொண்டு வந்து இங்கே பாதுகாப்புடன் பேக் செய்து அனுப்பலாம். மேலும் வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு ஆதார் சேவை மையமும் இந்த வளாகத்தில் செயல்பட்டு தொடங்கி உள்ளது.
இதுகுறித்து கோவை ஆர்.எம்.எஸ் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு கூறியதாவது:
கடிதம் மற்றும் பார்சல் புக்கிங் வசதி மட்டும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பொதுமக்கள் தேவைக்கேற்ப மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் அவர்களுடைய பார்சல் மற்றும் தபால்களை அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 24 மணி நேரமும் செயல்படும் அலுவலகமாக இந்த அலுவலகம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆதார் சேவை மையம் இரவு 8 மணி வரை செயல்படுவதால் பள்ளிக்கு சென்று திரும்பும் மாணவ, மாணவிகள் தங்கள் ஆதார் திருத்தங்களை பெற்றோர்களுடன் வந்து மாலை நேரங்களில் மேற்கொள்வதற்கு இது வசதியாக உள்ளது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

