கோவை: கோவையில் மார்ச் மாதத்தில் மட்டும் 28 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:-
கோவை மாநகர காவல் ஆணையராக சரவண சுந்தர் பொறுப்பேற்ற பிறகு, கடந்த மூன்று மாதங்களில் கோவை மாநகர பகுதிகளில் உள்ள A+, A மற்றும் B வகையைச் சேர்ந்த ரவுடிகள மற்றும் சமூக விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த எதிரிகள் மீது, பலவேறு சட்ட பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தொடர்ந்து சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ரவுடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஆகியோரை கண்டறிந்து, அவர்களில் 110 நபர்கள் பட்டியலிடப்பட்டனர்.
மேற்படி, அந்த நபர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் விதமாக கோவை மாநகர காவல் எல்லையிலிருந்து ஆறு மாத காலத்திற்கு ஒதுக்கி வைக்கும் விதமாக தமிழ்நாடு நகர காவல் சட்டம் பிரிவு 51(A)ன் படி கோவை மாநகர காவல் ஆணையரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவர்கள் ம் நகரிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
குண்டர் தடுப்புச் சட்டம்
அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில், உத்தரவிற்கு மாறாக விதிமீறல் புரிந்த 9 நபர்கள் மீது தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1882, பிரிவு 51(A)(6)(a)ன படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு எதிராக தொடர்ந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில், மார்ச் மாதத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த மற்றும் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 28 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 10 நபர்கள் மீது மருந்து சரக்கு குற்றவாளிகள் பிரிவின் கீழும், 14 பேர் மீது குண்டர்கள் தடுப்பு பிரிவின் கீழும், 4 பேர் மீது பாலியல் குற்றவாளிகள் பிரிவின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.