கோவைக்குள் நுழைய 29 பேருக்கு தடை; கமிஷனர் அதிரடி!

கோவை: நடப்பு மாதத்தில் மட்டும் பொதுமக்களுக்கு இடையூறு செய்த 29 நபர்கள் கோவை மாநகருக்குள் நுழைய தடை விதித்து மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Advertisement

சரவண சுந்தர் கோவை மாநகர காவல் ஆணையராகப் பொறுப்பேற்ற பிறகு கடந்த மூன்று மாதங்களில் கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் A+, A, B வகை குற்றங்களைச் செய்யும் ரவுடிகளின் செயல்களை ஒடுக்க சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டு, தங்கள் மீதுள்ள வழக்குகளில் உள்ள சாட்சிகளை விசாரிக்க விடாமல், சாட்சிகளைக் கலைத்தும், அவர்கள் மீதுள்ள வழக்குகளில் தொடர்ந்து இடையூறு செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வந்த நபர்கள் மீது 51(A) TNCP Act 1888-ன் படி நடவடிக்கை எடுத்து கோயமுத்தூர் மாநகரை விட்டு 6 மாத காலத்திற்கு வெளியேற ஆணை பிறப்பித்துள்ளார்.

மேலும், பொது அமைதியை நிலைநாட்டவும் சட்டம் ஒழுங்கை சிறப்பாக மேற்கொள்ளவும், கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் 25ம் தேதி வரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 76 நபர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதில் மருந்து சரக்கு குற்றவாளிகள் 25 பேர், குண்டர்கள் 39 பேர், பாலியல் குற்றவாளிகள் 8 பேர், கணினி வெளிச் சட்டக் குற்றவாளிகள் 4 பேர் அடங்குவர்.

Advertisement

நடப்பு ஏப்ரல் மாதத்தில், தொடர் குற்றச் செயல்கள் மற்றும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த 29 நபர்கள் மீது 51(A) TNCP Act – 1888ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி அந்த 29 நபர்கள் அடுத்த 6 மாத காலத்திற்கு, நீதிமன்ற நடவடிக்கைகள் தவிர, பிற காரணங்களுக்கு நகரின் உள்ளே வர தடை விதித்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

Recent News