கோவை: கோவையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றின் அனைத்து வார்டுகளிலும் 3 நாட்கள் வார்டு அளவிலான சிறப்புக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பில் வார்டு அளவிலான சிறப்புக் கூட்டங்கள் நடத்துவதற்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து வார்டுகளிலும் நகர் மன்ற உறுப்பினர் தலைமையில் ஒரு அலுவலரை கூட்டுநராகக் கொண்டு பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் பங்கேற்புடன் வார்டு அளவிலான சிறப்புக் கூட்டங்களை 27.10.2025, 28.10.2025 மற்றும் 29.10.2025 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு தேதியில் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
முன்னுரிமை அடிப்படையில் ஏதேனும் மூன்று கோரிக்கைகள் மட்டும் செயல்படுத்தும் விதமாக கோரிக்கைகளை பெற்று அதனை “முதல்வரின் முகவரி” இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பின்பு தீர்வுகாண வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி. பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் அடிப்படை சேவைகளான குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலைகள், பூங்கா, மழைநீர் வடிகால் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்து அவற்றில் நிலவும் சேவை குறைபாடுகள் தொடர்பாக விவாதித்தல் அடிப்படையில்
1) நகராட்சி பகுதிகளை பசுமையாக்கும் வகையில் திறந்தவெளி இடங்கள் சாலையோரப் பகுதிகள், குளக்கரைகள் மற்றும் ஏரிக்கரைகளில் சமூக ஆர்வலர்கள் தொழிற்சாலை/ இதர நிறுவனங்கள் பங்களிப்புடன் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது குறித்து விவாதித்தல்,
2) நகராட்சி பகுதிகளில் உள்ள பூங்காக்களை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கம் மூலம் பராமரிப்பு செய்வது குறித்து விவாதித்தல்.
3) வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்கு முன்பாக மழைநீர் வடிகால்களை தூர்வாருதல் மற்றும் வழக்கமாக மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து விவாதித்தல்.
4) நகராட்சி பகுதிகளில் தூய்மை பணிகளை மேம்படுத்த பொதுமக்கள் பங்கேற்புடன் நடத்தப்படும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், செயல்பாடுகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்து விவாதித்தல்.
5) நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்தும் முறைகள் குறித்து விவாதித்தல்.
6) நகராட்சி கட்டுப்பாட்டில் ள்ள பள்ளிகளில் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் குறித்து விவாதித்தல்.
7) நகராட்சி பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை புனரமைப்பு செய்து முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்.
8) நகராட்சிகளில் அமைந்துள்ள நீர்நிலைகள் மாசு ஏற்படாமல் இருக்கவும் நீராதாரங்களை பாதுகாக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல் ஆகியவை ஆகும்
எனவே, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் நடத்தப்படும் சிறப்புக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு, குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகளை வழங்கி தீர்வினை பெற்றுக் கொள்ளுமாறு ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.



