கோவை: நாடு தழுவிய பாரத் பந்த் காரணமாக கோவையில் இருந்து கேரளா மாநிலத்திற்குச் செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழில் சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அதன்படி வங்கிகள், தொலைத்தொடர்பு, ரயில்வே, மின்சாரம், நிலக்கரி, சுரங்கங்கள், விமான நிலையங்கள் மற்றும் சாலை போக்குவரத்து போன்றவற்றை தனியார் மையமாக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்று உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் இன்று பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவையில் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதனால் அந்தத் தொழில் சங்கத்தைச் சார்ந்தவர்கள் பேருந்து மற்றும் ஆட்டோக்கள் போன்றவற்றை இயக்கவில்லை.

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குச் செல்லக்கூடிய அரசு பேருந்தும் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் ரயில் மூலமாக கேரளாவை நோக்கிச் செல்கின்றனர்.
அதேபோல வணிகர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காததால் கடையடைப்பு நடைபெறவில்லை.
மேலும் வழக்கத்தை விட சற்று குறைவாக பேருந்துகள் மற்றும் ஆட்டோ இயக்கப்பட்டாலும் உள்ளூர் மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை.