கோவை: சூலூர் அருகே திமுகவினர் 800 சில்வர் அண்டாக்களை பதுக்கி வைத்திருந்த அதனுடன் சேர்த்து குடோனுக்கும் சீல் வைக்கப்பட்டது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சியினர் சார்பில் பரிசுப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அத்தகவலின் அடிப்படையில், பறக்கும் படை அதிகாரி அகிலாண்டேஸ்வரி தலைமையிலான குழுவினர் இருகூர் செல்வ விநாயகர் கோவில் அருகே உள்ள கலாமணி என்பவருக்குச் சொந்தமான அந்த குடோனில் நடத்தினர்.
சோதனையின்போது, சுமார் 800 சில்வர் அண்டாக்கள் மற்றும் பல்வேறு சில்வர் பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்த பாத்திரங்களின் மொத்த மதிப்பு சுமார் 40,000 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்களின்றி வைக்கப்பட்டிருந்த அந்தப் பாத்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அண்டாக்களுடன் சேர்த்து, அந்த குடோனுக்கும் சீல் வைத்தனர்.

