கோவை: துணை குடியரசுத் தலைவர் வரும்பொழுது பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி இரு சக்கர வாகனத்தில் இருவர் சென்ற சம்பவத்தை NIA விசாரிக்க வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தியுள்ளனர்.
துணைக் குடியரசுத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் நேற்று கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அந்த நிகழ்ச்சிக்காக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சாலையின் இருப்புறங்களிலும் பேரிகேட்டுகளை அமைக்கப்பட்டது
பொதுமக்களும் மற்றும் பாஜகவினர்களும் பேரிகேட்டுகளுக்குள்ளேயே நின்றவாறு நிகழ்ச்சியை காண காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. மேலும் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.
அந்நிலையில் அந்த நிகழ்விற்கு துணை குடியரசுத் தலைவர் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு காவல்துறையினரின் கட்டுப்பாட்டையும் மீறி இரண்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்த பாஜகவினர் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து கோவை வி கே கே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் கோவை மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காலை முதல் துணை குடியரசுத் தலைவர் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுத்ததில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் மாநகராட்சி அலுவலகப் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குவதில் கோட்டை விட்டுவிட்டார்கள் என குற்றம் சாட்டினார்.
அனீஸ் ரகுமான் ஆசிக் ஆகிய இருவர் அந்த பகுதியில் வேகமாக சென்று உள்ளார்கள் என்றார். 1998 ஆம் ஆண்டு அரங்கேறிய கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகள் பலரும் அந்த பகுதியில் தான் இருந்தார்கள், தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது இருப்பினும் கோவையில் இஸ்லாமியர்கள் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என தெரிவித்தார். அத்வானியை கொலை செய்யும் நோக்கத்துடன் அந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது அதை தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் மனித குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை குறிப்பிட்டார்.
நேற்றைய தினமே அந்த இருவரையும் பிடித்து ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் ஆனால் சாதாரண போக்குவரத்து விபத்து என்று மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இஸ்லாமியர்கள் என்ற ஒரு காரணத்திற்காக இந்த அரசாங்கமும் காவல்துறையும் கரிசனம் காட்டினாள் மிகப் பெரிய ஆபத்து கோவையில் இருக்கிறது என்பது தான் பாஜகவின் குற்றச்சாட்டு என்றார்.
அந்த இருவரும் அந்தப் பகுதியில் குடித்துவிட்டு வேகமாக செல்லும் பொழுது ஏதேனும் விபத்து ஏற்படுத்தி இருந்தால் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கும் இரண்டு மதங்களுக்கு இடையே உள்ள பிரச்சனை என்ற சூழலுக்கு சென்றிருக்கும் என்றார். துணை குடியரசுத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் கோவை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுதும் பெரிய தாக்குதல் எல்லாம் நடைபெற்றுள்ளது என்றார்.
அவர்கள் இருவரும் மீதும் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல் என்பதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் எங்கு குண்டுவெடிப்பு குற்ற செயல்கள் நடந்தாலும் அந்த குற்றவாளிகள் கோவையில் உக்கடம், கரும்பு கடை, செல்வபுரம் ஆகிய பகுதிகளில் தான் இருக்கிறார்கள் எனவே இந்த வழக்கை NIA விசாரிக்க வேண்டும் என கூறினார். மேலும் அவர்களிடத்தில் ஒரு லேப்டாப் இருந்ததாக கூறப்படும் நிலையில் அந்த லேப்டாப்பில் என்ன இருந்தது அவர்களை நோக்கம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தமிழக அரசாங்கத்தையும் காவல்துறையையும் நம்பி பிரயோஜனம் இல்லை எனவே இதனை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்த சம்பவத்தை கண்டித்து இன்று மாலை சிவானந்த காலனி பவர்ஹவுஸ் பகுதியில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் அதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர்வானதி சீனிவாசன் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த இருவரில் ஒருவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் குறிப்பாக, கோவை கார் குண்டு வெடித்து முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முபின் உடன் பழக்கமானவர் என்று தகவல்கள் இருப்பதால் அனைத்தையும் விசாரித்து உண்மையை கூறும் பொறுப்பு காவல் துறைக்கு உள்ளது என தெரிவித்தார்.



