விதிகளை மீறினால் அபராதம்: 8 இடங்களில் ஏஐ கேமிரா; கோவை கமிஷனர் தகவல்!

கோவை:புதிதாக கட்டப்பட்டுள்ள ஜி.டி மேம்பாலத்தில் போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க திரையுடன், 8 இடங்களில் ஏஐ கேமிரா பொருத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டுவின்ஸ் வரை 10.1 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த ஜிடி மேம்பாலத்தை கடந்த 9ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனால் அவினாசி சாலையில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைத்தது.

Advertisement

இதற்கிடையே, உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் நெரிசல் ஏற்பட்டு வந்தது.இதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசார் உப்பிலிப்பாளையம் ரவுண்டானாவில் சிக்னல் அமைக்க முடிவு செய்தனர். அதன்படி உடனடியாக சிக்னல் அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

அதன் பின்னர் போக்குவரத்து நெரிசல் கட்டுக்குள் வந்தது. மேலும், வாகன ஓட்டிகளுக்காக மேம்பாலத்தின் இருபுறத்திலும் இறங்குதலங்கள் எங்கெங்கு உள்ளன, எத்தனை தூரத்தில் இறங்குதளங்கள் உள்ளன, எந்த சாலையில் வாகனங்கள் செல்ல வேண்டும் என்பது போன்ற அறிவிப்பு பலகைகள் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

இதனிடையே மேம்பாலத்தில் சிலர் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதாக புகார் எழுந்தது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதனிடையே நிர்ணைக்கப்பட்ட வேகத்தைத் தாண்டி அதிவேகமாக பாலத்தைக் கடந்தால் ஆட்டோமேட்டிக்காக அபராதம் விதிக்கப்பட உள்ளது.

அதேபோல மேம்பாலத்தில் அதிவேகமாக செல்லும் வாகனங்களின் பதிவு எண்கள் பாலத்தில் அமைக்கப்பட உள்ள திரையில் தெரியும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறியதாவது:-

மாநில நெடுஞ்சாலைத் துறையுடன் இணைந்து, மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வாகன ஓட்டிகளின் வேகத்தைக் குறைக்க அனைத்து இறங்குதளங்களிலும் மாநில நெடுஞ்சாலைத் துறை (ரம்பிள் ஸ்ட்ரிப்) வேக தடைகள் நிறுவப்பட்டுள்ளன.

அதேபோல், மேம்பாலத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் 8 இடங்களிலும் செயற்கை நுண்ணறிவு கேமிராக்களை நிறுவ மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தில் பல வாகன ஓட்டிகள் அதிக வேகத்தில் பயணிப்பதால், சாய்வுப் பாதைகளில் ஏறும் வாகனங்கள் சிரமப்படுகின்றன. இது விபத்துகளுக்கு வழிவகுக்கும். இந்த மீறல்களைத் தடுக்க, ஏஐ அடிப்படையிலான கேமிராக்கள் நிறுவப்பட உள்ளன.

இந்த கேமிராக்கள் வேகம், ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாதது போன்ற விதிமீறல்களைக் கண்டறியும். மேலும், மேம்பாலத்தில் திரை பொருத்தப்பட்ட உள்ளது. இந்த திரையில் விதி மீறல்களில் ஈடுபடும் வாகன எண் காண்பிக்கப்படும். தற்போது இவற்றைப் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு சரவண சுந்தர் கூறினார்

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp