கோவை: பாஜகவுடன் யார் சேர்ந்து வந்தாலும் அவர்கள் தமிழ் மண்ணில் தோற்கடிக்கப்படுவார்கள் என்று சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
கோவை பூமார்க்கெட் பகுதியில் இந்திய கலாச்சார நட்புறவு கழகம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், மாவட்ட ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து “செயற்கை நுண்ணறிவும் உழைப்பின் எதிர்காலமும்” என்ற நூல் வெளியீட்டு விழாவை நடத்தினர். இந்த நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நாளைய தினம் தமிழக முதல்வர் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தத்தை எதிர்த்து தமிழக முதல்வர் நடத்தும் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என்றார். தேர்தல் ஆணையம் தமிழக முதல்வர் கால அவகாசம் கேட்டும் கூட இதில் அவசரப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்வதாகவும் அது எதற்கு என்று கேள்வி எழுப்பினார்.
பீகார் மாநிலம் ஏற்கனவே இதில் அச்சத்தையும் அவநம்பிக்கையையும் தந்துள்ளதாகவும் பீகாரை போல் தமிழகத்தையும் களம் மாற்றலாம் என்று ஒன்றிய அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டிய அவர் எனவே அந்தத் திட்டத்தை தாங்கள் எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். இந்தியாவின் அடித்தலமே ஒரு வாக்கு சீட்டு தான் என குறிப்பிட்ட அவர், பொருளாதாரத்திலும் சமூகத்திலும் ஏற்றத்தாழ்வு நீடிக்கக்கூடிய நாடு ஆனால் இந்திய குடிமக்கள் அளிக்கின்ற வாக்கில் தான் ஜனநாயகம் இருக்கிறது இதனையும் பறித்து விட்டால் நாடு நாடாக இருக்காது என்று அம்பேத்கர் கூறியதை குறிப்பிட்டார்.
கண்டறிவது நீக்குவது சொந்த நாட்டு மக்களையே அகதிகள் முகாமில் சேர்ப்பது என்பது தேசிய குடியுரிமை சட்டத்தின் போது பார்த்தோம் என்றும் அதே நோக்கில் தான் ஒன்றிய அரசு தற்போதும் செயல்படுகிறது என்ற அச்சம் எங்களுக்கு நிலவுவதாக தெரிவித்தார். பீகாரில் இந்திய பிரதமர் பேசிய உரை ஏற்புடையது அல்ல என்றும் அதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது என்று தெரிவித்தார்.
இந்தியாவிலேயே வகுப்பு கலவரங்கள் இல்லாத பூமி தமிழ்நாடு தான், அமெரிக்காவில் கூட கலவரங்கள் இருக்கிறது புலம்பெயர்ந்தவர்களை தாக்குவது கருப்பின மக்களை தாக்குகிறார்கள் ஆனால் அதுபோன்ற எந்த ஒரு சம்பவமும் இல்லாத உலகத்தின் தலைசிறந்த பூமி தமிழ்நாடு தான் என தெரிவித்தார். தமிழ்நாடு ஒரு கலாச்சார பூமி பண்பாட்டு பூமி என்று தெரிவித்த அவர் பிறர் கொள்கைகளை ஏற்காவிட்டாலும் பிறரை மதிக்கிற பூமி தமிழ்நாடு என்ற அவர் இந்த நல்லிணக்க பூமி மீது நாட்டின் பிரதமரை தாக்குதல் தொடுப்பது என்பது இது அழகல்ல என்று தெரிவித்தார்.
மோடியும் அமித்ஷா இருவரும் ஒரே போன்று தான் பேசுவதாகவும், இருவரும் சேர்ந்து நேருவை குறி வைத்து வல்லபாய் படேலை உயர்த்துகிறார்கள் என்று தெரிவித்தார். வல்லபாய் படேலை நாங்கள் மதிக்கிறோம் அதே சமயம் சமஸ்தானங்களை இணைப்பதில் நேரு விற்கும் காந்திக்கும் பங்கு இல்லையா கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பங்கு இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.
அவர்கள் வல்லபாய் படேலை உயர்த்தி காந்தியை சிறுமைப்படுத்துகிறார்கள் என்றும் படேலுக்கு உயரமான சிலை வைத்து தேசத்தின் தந்தையை கீழே இறக்குவது, படேலை உயர்த்தி நேருவை குறி வைப்பது போன்ற அரசியல் ஏற்புடையது அல்ல என்று கூறிய அவர் இந்தியா ஜனநாயக நாடு ஏராளமான கடமைகள் உள்ளது அயல் உறவு கொள்கையில் இந்தியா தோற்றுவிட்டது என சாடினார்.
எது எப்படி இருந்தாலும் திமுக கூட்டணி வலுவாக உள்ளது தமிழக மக்கள் தான் எங்களுடைய நம்பிக்கை தமிழக மக்கள் மத சார்பு கருத்துக்களை ஏற்க மாட்டார்கள் எனவே தமிழர்களுக்கே உரிய நல்லியல்பு ஒற்றுமை தான் எனவே கூட்டணியை விட எங்களுக்கு பலம் தமிழக மக்கள் தான் என்றார். திமுக கூட்டணி வெற்றி பெறும் பாஜகவுடன் யார் சேர்ந்து வந்தாலும் அவர்கள் தமிழ் மண்ணில் தோற்கடிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
தமிழக வெற்றி கழகம் குறித்தான கேள்விக்கு உட்கட்சி விவகாரம் அவர்கள் தான் பதில் அளிக்க வேண்டாம் என தெரிவித்தார். அதிமுக விவகாரம் தொடர்பான கேள்விக்கு அதிமுக ஒரு ஜனநாயக கட்சி, பல கட்சிகள் இயங்கக்கூடிய ஒரு நாட்டில் அதிமுக போன்ற கட்சிகள் இருக்க வேண்டும் என்பதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருதுவதாகவும் ஆனால் அதிமுக கொள்கைகளுக்கு எதிராக பிஜேபி உடன் இணையும் பொழுது அது கரைந்து விடுமோ என்ற அச்சமும் எழுவதாக தெரிவித்தார்.
பாஜக தான் தலைவர்களையும் மதித்து விழா எடுக்கிறது என்று பாஜகவினர் கூறிவரும் கருத்து தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் அது ஒரு பொய் பிரச்சாரம் என்றும் காந்தி பிறந்த இடம் குஜராத் ஆனால் அங்கு அவருக்கு சிலை உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். இந்திய விடுதலைப் போருக்கு தலைமை தாங்கியவர் வல்லபாய் படேல் அல்ல, படேலுக்கு சிலை வைப்பதில் அரசியல் உள்ளதாக விமர்சித்தார். பிரதமர் மோடி வந்த பிறகு தான் விமானம் பறக்கிறது கப்பல் இயங்குகிறது ரயில் ஓடுகிறது என்பதெல்லாம் மலிவான அரசியல் என்றும் ஏற்புடையது அல்ல அதனை நிராகரிக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக ராகுல் காந்தி எதுவும் கூறவில்லை என்று பாஜகவினர் கூறி வருவது தொடர்பான கேள்விக்கு, பீகாரில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும் அப்படி இருக்கும் பொழுது எதற்காக இங்கு அதனை செயல்படுத்த அவசரம் காட்டுகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.
SIR பணிகள் தொடங்கி விட்டது குறித்தான கேள்விக்கு, சட்ட அணுகுமுறை உள்ளது மக்கள் கிளர்ச்சி உள்ளது நாங்கள் அதனை எதிர்க்கிறோம். மேலும் இது விவகாரத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் அப்பீல் செய்வதாகவும் கூறியவர் இதற்கு மதிப்பளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
விஜய் பாஜக உடன் இணைவாரா என்ற கேள்விக்கு அந்த கணிப்பு எனக்கு தெரியாது, யார் யாருடன் சேர்ந்து கொண்டாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் நல்ல ஜனநாயக சக்திகள் அங்கு இருந்தாலும் கூட பாஜகவுடன் அணி சேர்வதால் அவர்களுக்கு தோல்வி காத்திருக்கிறது என தெரிவித்தார்.



