கோவை: கோயம்புத்தூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.
கோவை வ.உ.சி மைதானத்தில் கோயம்புத்தூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. இதனை இன்று தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்து கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
இந்த நிகழ்வில் கோவை, பொள்ளாச்சி எம்பிக்கள், மாவட்ட ஆட்சியர், மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த இரண்டு தினங்களுக்கு மாலை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முதல்வர் ஆணைக்கிங்க துணை முதல்வர் வழிகாட்டுதலின் படி இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னை சங்கமம் நிகழ்ச்சி பொங்கலுக்கு துவங்கப்பட்டது, அதனை தொடர்ந்து கோவையில் கோவை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றார்.
நம்முடைய கலையை போற்றும் வகையிலும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்றார். கலைஞரால் நம்ம ஊரு திருவிழா துவக்கப்பட்டது என்றும் தற்போது முதல்வர் இதனை நடத்தி வருகிறார் என்றும் கூறினார்.
அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் கிராமிய கலைகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்தான கேள்விக்கு, இது குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது மேலும் அதனை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
முதல்வர் வந்த பிறகு தான் நிலுவையில் இருந்த கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது என்றும் ஊக்கத்தொகையும் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
வணிக நிறுவனங்களில் தமிழ் பெயர் பலகைகள் வைப்பது குறித்தான கேள்விக்கு, தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது, மீண்டும் 10,15 நாட்களில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கலந்து பேசி நடவடிக்கைகள் எடுக்கப்படும் தமிழ் வளர்ச்சி துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்கும் என்றார்.



