கோவையில் கோலம் போட்ட பெண்ணிடம் கைவரிசை!

கோவை: வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்ணிடம் நகையை பறித்த திருடர்கள் பொதுமக்கள் திரண்டதால் பைக்கை போட்டு தப்பினர்.

கோவை காட்டூர், ஜி.பி. தோட்டம், சி.கே.காலனியை சேர்ந்தவர் முருகேசன் (40). டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (35). இவர் தினமும் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போடுவது வழக்கம்.

அதேபோல நேற்று அதிகாலை சரண்யா வீட்டு முன்பு தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக் கொண்டு இருந்தார். அப்போது 2 வாலிபர்கள் அங்கு பைக்கில் வந்தனர். அவர்கள் சரண்யா அருகில் சென்றனர். அதில் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர், சரண்யா கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பிடித்து இழுத்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சரண்யா செயினை பறிக்க விடாமல் இருக்கமாக பிடித்துக் கொண்டு அவர்களுடன் போராடினார். தொடர்ந்து சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார்.
இதனால் பயந்து போன திருடர்கள் செயினை பலமாக பிடித்து இழுத்தனர். அதில் செயின் 4 துண்டாகி ஒரு துண்டு மட்டும் அவர்களின் கையில் சிக்கிக்கொண்டது.

சரண்யாவின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து திருடர்கள் பைக்கில் தப்ப முயன்றனர். ஆனால் பொதுமக்கள் நெருங்கியதால் திருடர்கள் பைக்கை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து சரண்யா காட்டூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கை கைப்பறறி தப்பி ஓடிய திருடர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Recent News

Video

Join WhatsApp