கோவை: கோவையில் வேலை கேட்டு தியேட்டர் மேலாளர் கத்தியாக் குத்தப்பட்ட சம்பவத்தில் வாலிபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுண்டக்காமுத்தூர் பெரிய செட்டி வீதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (37). இவர் உடையாம்பாளையம் பகுதியில் உள்ள பிரபல தியேட்டரில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவருடன் அசாமை சேர்ந்த ரூபா டோல் மற்றும் ரஞ்சித் ஆகியோர் தூய்மை பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள் 2 பேரும் தியேட்டர் அருகே உள்ள இறைச்சி கடைக்கு சென்று தியேட்டருக்கு திரும்பினர்.
அப்போது தியேட்டர் முன்பு நின்றிருந்த 3 பேர் திடீரென ரூபா டோல், ரஞ்சித் ஆகியோரை தடுத்து நிறுத்தி தியேட்டரில் வேலை வாங்கி தரும்படி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்து நவநீதகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு சென்று அந்த 3 பேரையும் தகராறில் ஈடுபடாமல் களைந்து செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 3 பேரும் நவநீதகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். அதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நவநீதகிருஷ்ணனை குத்தினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மனோகரன் என்பவர் ஓடி வந்து அவர்களை தடுத்து நவநீதகிருஷ்ணனை மீட்க முயற்சி செய்தார்.
அப்போது அவர்கள் மனோகரனையும் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதனால் அவர் அலறி சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
பின்னர் பலத்த காயம் அடைந்த நவநீதகிருஷ்ணன் மற்றும் மனோகரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து நவநீதகிருஷ்ணன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் வேலை கேட்டு நவநீதகிருஷ்ணனை கத்தியால் குத்தியது சவுரிபாளையம் நேதாஜி வீதியை சேர்ந்த ரியாஸ் என்கிற ரவி (23), சவுரிபாளையம் பீளமேடு மெயின் ரோட்டை சேர்ந்த ரகு பிரசாத் (21) மற்றும் கார்த்திகேயன் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

