கோவை: கோவையில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வாடிக்கையாளரிடம் ரசீது எதுவும் கொடுக்காமல் ரூ. 2 லட்சம் பெற்று மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
வடமதுரை பழனிகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் ரக்ஷனா (26). இவர் கோவை தடாகம் சாலையில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவு தலைமை பொறுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது நிறுவனத்தில் தடாகம் பகுதியைச் சேர்ந்த மரியாமோல் என்கிற கலைச்செல்வி (30) என்பவர் விற்பனைப் பிரிவில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் வேலைக்கு சரியாக வராத காரணத்தால், இவரை கடந்த செப்டம்பர் மாதம் நிறுவனத்தினர் பணியிலிருந்து நீக்கிவிட்டனர்.
ஆனால், நிறுவனத்தினர் அவரிடம் கொடுத்திருந்த செல்போன், லேப்டாப், எலக்ட்ரீக் ஸ்கூட்டர் ஆகியவற்றை திருப்பி ஒப்படைக்காமல் இருந்து வந்தார்.
மேலும், வாடிக்கையாளர் ஒருவரிடம் நிறுவனத்தின் பெயரைச் கூறி ரூ. 2 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு அதற்கு ரசீது எதுவும் கொடுக்காமலும் சென்றுள்ளார்.
பணத்தை கொடுத்தவர் நிறுவனத்திற்கு வந்து தான் கொடுத்த பணத்திற்கு ரசீது கேட்டபோது தான் மரியாமோல் மோசடியில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரக்ஷனா அவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் செல்போனை மட்டும் கொடுத்துவிட்டு பணத்தையும், லெப்டாப்பை, ஸ்கூட்டரை பின்னர் தருவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் வெகு நாட்களாகியும் பணத்தையும், மற்றவற்றையும் அவர் ஒப்படைக்கவில்லை. இதனால் ரக்ஷனா சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனை தெரிந்து கொண்ட மரியாமோல் தலைமறைவானார்.


