கோவை: கோவை கணுவாய் செல்லும் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. 19 வருடமாக ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது விஜயமங்கலம் பகுதியில் மதுபோதையில் ஓய்வு பெற்ற மின்சார ஊழியர் ஒருவர் இரு சக்கரம் வாகனத்தில் சாலை கடக்கும் போது விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை அடுத்து ஓட்டுனர் துரைசாமி பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு145 நாட்கள் போக்குவரத்து துறை பணி வழங்காததால் கூடுதல் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் முதல் தவணையாக 32 ஆயிரம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் போக்குவரத்துத்துறை
உத்தரவிட்ட பணத்தையும் வழங்காததால் இன்று கோவை ரயில் நிலையம் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியில் முன்புறம் மற்றும் பின்புறம் நீதிமன்றம் நோட்டீசை ஒட்டி நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
ஜப்தி செய்யப்பட்ட பேருந்து ரயில்நிலையம் முதல் கணுவாய் வரை செல்லும் 11ம் எண் பேருந்து ஆகும். இந்த பேருந்தில் காலை மற்றும் மாலை வேலைகளில் பணிக்கு செல்லும் பெண்கள், பள்ளி மாணவர்கள் அதிகம் பயணம் செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.


