கோவை: கோவையில் வீடு புகுந்து மூதாட்டியின் நகை திருடிய சம்பவத்தில் பக்கத்து வீட்டுக்காரரின் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
வேலாண்டிப்பாளையம் மணியகாரர் நகரை சேர்ந்தவர் கனகராஜ் (53). இவரது 70 வயது தாயார் தடாகம் ரோட்டில் வசித்து வருகிறார்.
அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சசி. இவரது வீட்டிற்கு அவரது நண்பர் வேலாண்டிப்பாளையம் அம்மன் கோயில் 2வது வீதியை சேர்ந்த ஹரிஹரன் (22) என்பவர் அடிக்கடி வந்து சென்றார்.
இந்த நிலையில் கனகராஜின் தாயார் தனது 4 பவுன் தங்க நகைகளை வீட்டில் வைத்து விட்டு வெளியே சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் இருந்த தங்க நகைகள் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் தனது மகன் கனகராஜிடம் தெரிவித்தார். அவர் உடனே தாயாரின் வீட்டிற்கு வந்து சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சசி வீட்டிற்கு வந்து செல்லும் அவரது நண்பர் ஹரிஹரன் வீடு புகுந்து நகையை திருடி சென்றது தெரியவந்தது.
மூதாட்டியிடம் நகை இருப்பதை அறிந்து, அவர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, வீடுபுகுந்து கைவரிசை காட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஹரிஹரனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 4 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர்.


