கோவை: தேர்தல் விதிகளை மீறியதாக பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர் விடுதலை செய்யபட்டார்.
கோவையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தாமரைச் சின்னத்தில் பா.ஜ.க சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டார்.
அப்போது சித்தாபுதூர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர்களிடம் பாஜகவிற்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க கோரியதாகவும், கட்சியின் சின்னம் மற்றும் வேட்பாளரின் புகைப்படத்தின் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்ததாகவும் இது தேர்தல் விதிமுறை மீறல் என வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக கோவில்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்ததாகவும், துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டதும் அரசு தரப்பில் நிரூபிக்கப்படவில்லை என்பதால், வானதி சீனிவாசன் இந்த வழக்கில் விடுதலை செய்யப்படுவதாக முதலாம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழியன் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.


