கோவை: கோவையில் உரிய இடத்தில் பேருந்தை நிறுத்தாமல் பயணிகளை தரக்குறைவாகப் பேசியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்தனர்.
உக்கடத்தில் இருந்து சுல்தான் பேட்டை நோக்கிச் செல்லும் S-27 என்ற இலக்கமிட்ட அரசுப் பேருந்து ஒன்று இன்று மதியம் உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அந்த பேருந்தில் பயணிகள் ஏறிய நிலையில், பேருந்தின் டிரைவர் வண்டியை டவுன்ஹால் பகுதியில் உள்ள நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இதனால் அங்கு இறங்க வேண்டிய பயணிகள் வண்டியை நிறுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால் அந்த டிரைவர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, பயணிகளை அரசுப் பேருந்து டிரைவர் பயணிகளைத் தரக்குறைவாக பேசியதோடு, “வண்டியை அடுத்த நிறுத்தத்தில் தான் நிறுத்த முடியும், உன்னால் முடிந்ததை செய்து கொள்” என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், டவுன்ஹால் 5 கார்னர் அருகே பேருந்து நின்றதும், இறங்கி வந்து அந்த பேருந்தை சிறைபிடித்தனர். மேலும், அந்த வண்டியின் முன்புறம் நின்று, டிரைவர் மற்றும் கன்டெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், அங்கு வந்த போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி சாலையின் ஒருபுறம் அழைத்துச் சென்றனர். அந்த நேரத்தில், டிரைவர் பேருந்தை வேகமாக இயக்கியபடி அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதுகுறித்து நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூரிடம் பொதுமக்கள் கூறுகையில், “வேலைக்குப் போவதற்காக வந்தோம். உரிய நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் டிரைவர் திமிராகப் பேசுகிறார். உன்னால் என்ன செய்ய முடியும் என்று கேட்கிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றனர்.
இந்த சம்பவத்தால் டவுன்ஹால் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


