கோவை: சூலூர் கள்ளப்பாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
சூலூர் கள்ளப்பாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சாதி பெயரை சொல்லி திட்டுவதாகவும், கழிவறைக்கு சென்று வர தாமதமானால் அடிப்பதாகவும் மாணவிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
கோவை சூலூர் அடுத்த கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் தேவகிருபா ஜெயகிறிஸ்டி.
இவர் சாதியை குறிப்பிட்டு தங்களை திட்டுவதாகவும், கழிவறைக்கு சென்று வர தாமதமானால் அடிப்பதாகவும் மாணவிகள் 5 பேர் பெற்றோருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து மாணவிகள் கூறுகையில், அந்த பள்ளியில் 4 கழிவறைகள் மட்டுமே இருப்பதாகவும்அதில் இரண்டு கழிவறைகள் செயல்பாட்டில் இல்லாததால் மீதம் உள்ள இரண்டை தான் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவிகளும் பயன்படுத்தி வருவதாகவும் இந்நிலையில் இடைவேளையின் போது கழிவறைக்கு சென்று வர தாமதம் ஆனதால் தலைமை ஆசிரியர் தங்களை அடித்ததாக கூறினர்.
மேலும் அவர் தங்களை சாதியை குறிப்பிட்டு பேசுவதாகவும் பொட்டு வைத்து கொண்டு வர கூடாது, பூக்கள் வைக்க கூடாது என்று கூறுவதாகவும், மேலும் இரண்டு மாணவிகள் தங்களை காலணிகளை அணிந்து வர கூடாது என்று கூறுவதாகவும் தெரிவித்தனர். இது குறித்து சக ஆசிரியரிடம் கூறினால், அந்த ஆசிரியரையும் தலைமை ஆசிரியர் மிரட்டுவதாக கூறினர்.
மேலும் எங்களை அடித்து விட்டு அதனை வீட்டில் சொல்ல கூடாது, சிறிய விஷயத்தை பெரிதாக்க கூடாது என கூறியதாகவும் தெரிவித்தனர்.மேலும் தலைமை ஆசிரியர் தாக்கி ஒரு மாணவி மயக்கம் போட்டு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.


