கோவை: கோவையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற சைக்கிள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு 117 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினர். ஆனால், வழங்கியதுமே அந்த சைக்கிள் ஓட்டும் நிலையில் இல்ல என்று தெரிவித்த மாணவர்கள், பொருட்களும் தரமற்று இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், “எங்களுக்கு காற்றில்லாத டயர்களுடன் தான் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. சில சைக்கிள்களில் டியூப் வால்வுகள் இல்லை, பிரேக்குகள் சரியாக பொருத்தப்படவில்லை, பல சைக்கிளில் பெல் ஒழுங்காக வேலை செய்யவில்லை.
இதனால் பள்ளியில் இருந்து நேராக பழுதுபார்க்கும் கடைக்கு செல்ல வேண்டிய நிலை தான் ஏற்பட்டது.” என்றனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், “சைக்கிளில் காற்று இல்லை என்றால் மாணவர்கள் இறக்கிவிட்டிருப்பார்கள் என்று ஒப்பந்ததாரர்கள் கூறுகிறார்கள். உண்மையில் வழங்கப்பட்ட சைக்கிள்கள் தரமில்லாதவை.” என்றனர்.


