பெற்றோர்களே, ஆசிரியர்களே… கோவையில் பள்ளி மாணவர்களிடையே நோய்கள் அதிகரிப்பு!

கோவை: கோவையில் பள்ளி மாணவர்களிடையே, தொண்டை நோய்கள் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கோவையில் வடகிழக்கு பருவமழை துவங்கியதிலிருந்து காய்ச்சல், தலைவலி, வறண்ட இருமல், தொண்டை வலி, உடல்வலி, சோர்வு போன்ற அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதில் பள்ளி மாணவர்கள் அதிகளவில் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:

பருவநிலைமாற்றம் காரணமாக கோவை மாவட்டத்தில், பொதுமக்கள், குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே, தொண்டை நோய்கள் அதிகரித்துள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் நெருக்கமான தொடர்பில் இருப்பதால் அவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

மழைக்காலத்திலும், குளிர்காலத்திலும் வெப்பநிலை திடீர் மாற்றம், ஈரப்பதம் அதிகரிப்பதாலும் வைரஸ், கிருமிகள் விரைவாக பரவுகிறது. தண்ணீர் மாசுபாடு முக்கிய காரணமாக இருக்கிறது. மூக்கு மற்றும் தொண்டை வழியே எளிதாக உடலில் புகும் வைரஸ்கள் நேரடியாக தொற்றை ஏற்படுத்துகின்றன.

வறண்ட இருமல், தொண்டை வலி காய்ச்சலையும் ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக 70 வயதுக்கு மேற்பட்ட நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் இந்த தொற்றுக்கு எளிதில் ஆளாகிறார்கள். குழந்தைகள் உடல்நிலை சரியில்லாதபோது பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.

பல பெற்றோர் குழந்தைகளுக்கு ஆரம்ப கட்டத்தில் காய்ச்சல், இருமல், தொண்டை வலி இருந்தாலும் பள்ளிக்கு அனுப்புகின்றனர். இது மற்ற குழந்தைகளுக்கும் பரவி தொற்றை ஏற்படுத்தும் அபாயத்தை தருகிறது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Recent News

Video

Join WhatsApp