கோவை: கோவையில் பேருந்துக்காக காத்திருக்கும் மக்களுக்காக நிழற்குடைகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக உள்ள கோவையில் பொதுப்போக்குவரத்தை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அப்படி பேருந்திற்காக காத்திருக்கும் பொதுமக்களுக்கு, பேருந்து நிறுத்த நிழற்குடைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டன. அதில் பல நிழற்குடைகள் சேதமடைந்துள்ளன. சில இடங்களில் நிழற்குடைகளே இல்லாத பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.
இதனால் அங்கு பேருந்திற்காக காத்திருக்கும் மக்கள் வெயில் மற்றும் மழை நேரத்தில் ஒதுங்க இடமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.


Night lamp @ Amazon to buy click below


இதனிடையே, கோவை மாநகரில் பொதுமக்களின் தினசரி பயணத்தை சிரமமின்றி மாற்றும் நோக்கில், மாநகராட்சி சார்பில் 49 பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.
போத்தனூர், ஆத்துப்பாலம் சந்திப்பு, போத்தனூர் ஜங்சன், ரயில் நிலையம், காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் முதற்கட்டமாக இந்த நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளன.
புதிய நிழற்குடைகள் ‘pre-cast module’ வடிவமைப்பில் அமைக்கப்பட உள்ளதால், அவை எவ்வித வானிலையையும் தாங்கும் தரத்தில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிழற்குடைகள் இருக்கைகள், தகவல் பலகைகள், மின் விளக்குகள் போன்ற வசதிகளுடன் உருவாக்கப்பட உள்ளன. ஏற்கனவே சில முக்கிய சாலைகளில் இருந்த பழைய நிழற்குடைகள் பராமரிப்பு குறைவால் சேதமடைந்த நிலையில் இருந்ததால், தற்போது புதிய வடிவமைப்பில் ஒரே மாதிரியான தரத்துடன் நிழற்குடைகள் அமைக்கப்படுவது நகரின் தோற்றத்தையும் அழகுபடுத்தும்.
இதனால், வெயில், மழை, இரவு நேர பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை சந்தித்து வந்த பயணிகள் நிம்மதியடைவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரத்தில், இந்த நிழற்குடைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



