கோவையில் தேசிய லோக் அதாலத்; 5638 வழக்குகளுக்கு தீர்வு!

கோவை: கோவையில் நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் 5,638 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோவை நீதிமன்றம் மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி வால்பாறை, சூலூர், அன்னூர் மற்றும் மதுக்கரை நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நேற்று நடைபெற்றது.

மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும் மற்றும் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான விஜயா துவக்கி வைத்தார்.

கடந்த 2021ம் ஆண்டு கோவை மாவட்டம் காருண்யா நகரில் ஏற்பட்ட இரு சக்கர வாகன விபத்தில் அப்துல் மஜீத் உயிரிழந்தார். இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம், சமரச தீர்வின் அடிப்படையில் இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்த அப்துல் மஜீத் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை ரூ.13,50,000 காசோலையாக வழங்கப்பட்டது.

மேலும் இம்மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் (நிலம்,சொத்து,பாகப்பிரிவினை,வாடகை விவகாரங்கள்) மற்றும் தொழிலாளர் சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன்கள் மற்றும் கல்விக்கடன்கள் தொடர்பான வழக்குகள், விவாகரத்து தவிர மற்ற குடும்ப பிரச்சனை வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத வழக்குகள் ஆகியவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மொத்தம் 5,638 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டது. இதன் மொத்த தீர்வு தொகை ரூ.35 கோடியே 61 லட்சத்து 79 ஆயிரம் ஆகும். மேலும் 5 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 71 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

இந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பிரிந்து வாழ்ந்த 6 தம்பதிகள் திரும்பவும் இணைந்து வாழ ஒப்புக்கொண்டனர். இந்நிகழ்வில், கோவை மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான முதலாவது சிறப்பு நீதிமன்ற மாவட்ட நீதிபதி நாராயணன், கோவை மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான 2வது சிறப்பு நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுந்தரராஜன், மூத்த மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதிகள், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் பங்கேற்றனர்.

மாவட்டம் முழுவதும் 28 அமர்வுகள் மூலம் இந்த மக்கள் நீதிமன்றம் நடந்தது.

இதற்கான ஏற்பாட்டை கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர், சார்பு நீதிபதி ரமேஷ் செய்து இருந்தார்.

Recent News

சூலூரில் தீ விபத்து- கரும்புகை அதிகளவு வெளியேறியதால் மக்கள் அச்சம்..

கோவை: சூலூரில் எலக்ட்ரானிகல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

Video

Join WhatsApp