கோவை போலிசாரால் திருச்சியில் சுட்டு பிடிக்கப்பட்ட நபர் குறித்தான பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது…

கோவை: 21 வயதில் திருட்டுத் தொழில், பின்னர் சாமி தரிசனம்! சுட்டு பிடிக்கப்பட்டவர் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

கோவையில் திருட்டில் ஈடுப்பட்டு திருச்சியில் சுட்டு பிடிக்கப்பட்டார் வாலிபர் ராஜசேகர் 21 வயதில் திருட்டை தொடங்கி உள்ளார். அவர் கொள்ளையடித்ததும் சாமி தரிசனம் செய்து வந்து டிக்டாப் உடையில் வலம் வந்துள்ளார்.

கோவை போத்தனூர் அடுத்த வெள்ளலூர் இந்திரா நகர் மேகரலி வீதியை சேர்ந்தவர் ஞானபிரகாஷம் (36). அவர் அவிநாசி ரோட்டில் உள்ள அரசு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். ஞானபிரகாஷத்தின் பெற்றோர் திண்டுக்கலில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 18ம் தேதி ஞானபிரகாஷம் குடும்பத்துடன் தனது பெற்றோரை பார்க்க திண்டுக்கல் சென்றார்.

பின்னர் 21ம் தேதி வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 45 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் தெற்கு துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் கொள்ளையர்களை தேடி வந்தனர். அதில் கொள்ளையில் ஈடுபட்டது திண்டுக்கல் மாவட்டம் பெரியகடை வீதி பகவதி அம்மன் கோயில் வீதியை சேர்ந்த ராஜசேகர் (32) என்பது கண்டு பிடிக்கப்பட்டது.

மேலும் கவுண்டம்பாளையம் பகுதியில் நடந்த திருட்டு வழக்கிலும் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

அப்போது ராஜசேகர் திருச்சியில் பதுங்கி இருந்தது தனிப்படை போலீசாருக்கு தெரிந்தது. இதை தொடர்ந்து தனிப்படை போலீஸ் எஸ்ஐ பாஸ்கர் மற்றும் 4 போலீசார் திருச்சி விரைந்து சென்றனர். அங்கு எடமலைப்பட்டி புதூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட சீனிவாச நகரில் ஒரு வீட்டில் பதுங்கிருந்து தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்ய முயற்சி செய்தனர்.

போலீசாரை பார்த்ததும் ராஜசேகர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து எஸ்ஐ பாஸ்கர் மற்றும் முதுநிலை காவலர் கண்ணன் ஆகியோரை வெட்டி தப்ப முயன்றார். இதனால் போலீசார் தற்காப்பிற்காக ராஜசேகரை இடது காலில் துப்பாக்கியால் சுட்டு மடக்கி பிடித்தனர்.

தொடர்ந்து பலத்த காயம் அடைந்த எஸ்ஐ பாஸ்கர், முதுநிலை காவலர் கண்ணன் மற்றும் கொள்ளையன் ராஜசேகர் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

ராஜசேகர் குணமடைந்ததும் போலீசார் கோவை அழைத்து வர திட்டமிட்டுள்ளனர். இதற்கிடைய ராஜசேகர் கொள்ளையடித்து விட்டு கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்ததும். அவர் டிக்டாப் ஆக வலம் வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

கொள்ளையம் ராஜசேகர் தனது 21வது வயதில் கொள்ளையடிக்க தொடங்கி உள்ளார். சாய்பாபா பக்தரான அவர் தனது மார்பில் சாய்பாபா படத்தை பச்சை குத்தி உள்ளார்.

பெரிய அளவில் கொள்ளையில் ஈடுபட்டதும் நகைகளை பதுக்கி சீரடி சென்று சாய்பாபாவை தரிசனம் செய்து வந்துள்ளார். 21 வயதில் கொள்ளையடிக்க தொடங்கிய அவர் பின்னர் கொலை, கற்பழிப்பு என அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சிவகங்கையில் கொள்ளையில் ஈடுபட்டு ஒரு பெண்ணை கொன்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தப்பினார். அப்போது அவரை கைது செய்ய முயன்ற போது தடுமாறி விழுந்து அவரது கால் முறிந்தது. தற்போதும் போலீசாரை தாக்கி தப்ப முயன்றதில் அவரது காலில் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது 70க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. குண்டர் சட்டத்திலும் சிறை சென்று வந்துள்ளார். அவரை பல்வேறு மாவட்ட போலீசார் தேடி வருகின்றனர். ஆனால் கோவை போலீசாரிடம் சிக்கி கொண்டார். கோவையில் அவர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போத்தனூரில் 45 பவுனும், கவுண்டம்பாளையத்தில் 4 வீடுகளில் 2,3 பவுன் என 13 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். அந்த நகைகளை என்ன செய்தார்? யாரிடம் கொடுத்து வைத்துள்ளார்? அல்லது நகைகளை விற்று விட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

ராஜசேகரை பார்க்கும் போது ஒரு திருடனை போன்று இல்லாமல் டிக்டாப் ஆக வலம் வந்துள்ளார். கொள்ளையடிக்கும் பணத்தில் விலை உயர்ந்த ஆடைகள், கார், நட்சத்திர ஓட்டல் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு உதவிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ராஜசேகருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Recent News

Video

Join WhatsApp