கோவை: மனைவியின் தோழியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் மனைவியின் தோழியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் தனது மனைவியுடன் கோவை, சோமனூர், நஞ்சுண்டாபுரத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சாய்பாபா காலனியில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை செய்து வந்தார்.
மனைவியும் அங்கு வேலை செய்த ஒரு இளம் பெண்ணும் தோழியாக பழகிய நிலையில் ஜெகனுக்கு மனைவி மூலம் அந்த இளம்பெண் பழக்கமாகி உள்ளார். பின்னர் ஜெகன் அந்த இளம்பெண்ணுடன் அடிக்கடி போன் செய்து பேசி வந்ததால் ஜெகனுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிறந்த நாளன்று ஜெகனுக்கு அந்த இளம்பெண் கை கடிகாரத்தை பரிசாக வழங்கியதாக தெரிகிறது. தொடர்ந்து இளம்பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட ஜெகன், அவரது வீட்டுக்கு சென்று அந்த இளம் பெண்ணிடம் உன்னை விரும்புவதாகவும், மனைவியை விவாகரத்து செய்து விட்டு திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி உள்ளார். அதற்கு இளம்பெண் சம்மதிக்காமல் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜெகன் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்று விட்டு, எதுவும் தெரியாதது போல் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்று விட்டார்.
இளம் பெண்ணின் தங்கை வீட்டுக்கு வந்து பார்த்த போது அக்காள் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவலின் பெயரில் காவல் துறையினர் வந்து இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்த சாய்பாபா காலனி போலீசார் விசாரணை தொடங்கினார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அந்த இளம் பெண் கழுத்து நெரிக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் கொலை மற்றும் கற்பழிப்பு சட்டப் பிரிவுகளின் சேர்க்கப்பட்டன. இதை அடுத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார். இதில் ஜெகன் அந்த வீட்டுக்கு வந்து சென்றது கண்காணிப்பு கேமரா மூலம் உறுதி செய்யப்பட்டது.
உடனே அவரைப் பிடித்து விசாரித்த போது இளம் பெண்ணை கற்பழித்து கொலை செய்ததாக தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி சுந்தரராஜன் குற்றம் சாட்டப்பட்ட ஜெகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

