கோவை: 85 அடி உயரத்தில் தொங்கியபடி குழந்தைகள் யோகாசனம் செய்து உலக சாதனை படைத்து அசத்தி உள்ளனர்.
கூலி தொழிலாளர்களின் குழந்தைகளான 3 தனியார் பள்ளி மாணவர்கள், 85 அடி உயரத்தில் கிரேன் இயந்திரத்தில் தொங்கிய நிலையில் கடினமான யோகாசனங்களை நீண்ட நேரம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.

இச்சாதனையை ‘வேர்ல்ட்ஸ் ரெக்கார்டு யூனியன்’ அங்கீகரித்து பதக்கமும் சான்றிதழும் வழங்கியுள்ளது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் – பாக்யலட்சுமி தம்பதியின் மகன்கள் ரோகித் , ஹேமந்த் ஆகியோரும், கணியூர் பகுதியைச் சேர்ந்த ஜோதிமணி – மணிகண்டன் தம்பதியின் மகள் கவிஷ்கா ஆகியோரும் கணியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இம்மூவரும் கடந்த இரு ஆண்டுகளாக தொடர்ந்து யோகா பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கோவை கணியூர் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கிரேன் உதவியுடன் 85 அடி உயரத்தில் தொங்கியபடி ரோகித் மற்றும் ஹேமந்த் ஆகியோர் ‘சேது பந்தா தனுராசனா’வை ஐந்து நிமிடங்கள் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். தலைகீழாக தொங்கிய நிலையில் இவ்வாசனத்தை செய்தது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதேபோல், மிகக் கடினமான ‘சப்த திரிவிக்ரமாசனா’வை கவிஷ்கா ஒரு கால் கட்டிய நிலையில் 20 நிமிடங்கள் செய்து சாதனை புரிந்தார். சிறு வயதில் உடல்நலக் குறைவால் யோகா பயிலத் தொடங்கிய கவிஷ்கா, அந்தரத்தில் தொங்கியபடி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டது தங்களுக்கு பெருமை அளிப்பதாக அவரது பெற்றோர் கூறினர்.
நிகழ்வில் குழுமியிருந்த கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் மத்தியில் ‘வேர்ல்ட்ஸ் ரெக்கார்டு யூனியன்’ பிரதிநிதி மூவருக்கும் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.

