கோவை: விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் செம்மொழி பூங்காவை 13,584 பேர் கண்டு ரசித்தனர்
காந்திபுரம் பகுதியில் ரூ.208.50 கோடி மதிப்பில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு நவீன வசதிகளுடன் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த மாதம் 25ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து கடந்த 11ம் தேதி முதல் மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டது. நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்த செம்மொழி பூங்காவில் நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில், சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை, திருவோட்டு மரம், கலிபுடா, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் கொண்ட ரோஜா தோட்டம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம் உள்ளிட்ட பல வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ் பண்பாட்டின் முக்கிய அடையாளமான கடையேழு வள்ளல்களான பேகன், பாரி, காரி, ஆய் ஆண்டிரன், அதியன், நள்ளி, ஓரி ஆகியோரின் கற்சிலைகள், தாவரவியல் அருங்காட்சியகம் உள்ளன. குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா, ஏஐ மற்றும் விஆர் கேம்ஸ் கொண்ட உள் விளையாட்டு அரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேக விளையாட்டுப் பூங்கா, மேம்படுத்தப்பட்ட நடைபாதை,
150க்கும் மேற்பட்ட கல் இருக்கைகள், பொதுமக்கள் நடை பயிற்சி செய்வதற்கு கால் வலி ஏற்படாத வகையில் பிரத்யேகமான முறையில் மண் அடுக்குகளால் அமைக்கப்பட்ட நடைபாதை, பூங்கா வளாகத்தில் மருத்துவக்குழு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செயல்பட்டு வருகிறது.
நாளுக்கு, நாள் இந்த பூங்காவை பார்வையிட மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. பொதுமக்கள், சிறுவர்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகள், இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள் என கடந்த 11ம் தேதி முதல் நேற்று வரை 1,01,391 பேர் கண்டு ரசித்துள்ளனர்.
செம்மொழி பூங்கா பார்வையாளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்து சாதனைப்படைத்து வருகிறது. இதில் விடுமுறை நாளான நேற்று ஒரே நாளில் செம்மொழி பூங்காவை 13,584 பேர் கண்டு ரசித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்றைய தினத்தை விட அதிகளவில் மக்கள் கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

