கோவை: கோவையில் அரசு பேருந்துகளில் “தமிழ்நாடு” என்ற ஸ்டிக்கரை ஒட்டும் போராட்டத்தை மேற்கொண்டனர் நாம் தமிழர் கட்சியினர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக்த்தில் அனைத்து பேருந்துகளிலும் “அரசு போக்குவரத்துக் கழகம்” என்ற வார்த்தைகள் மட்டும் இருக்கும் நிலையில் “தமிழ்நாடு” என்ற வார்த்தையை திமுக அரசு விட்டு விட்டதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து அனைத்துப் பகுதிகளிலும் அரசு பேருந்துகளில் அரசு போக்குவரத்து கழகம் என்ற வார்த்தைக்கு முன்பு தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சியினர் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளில் “தமிழ்நாடு” என்ற ஸ்டிக்கரை ஒட்டும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டனர். கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பேரறிவாளன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பியவாறு பேருந்து நிலையத்தில் இருந்த அனைத்து அரசு பேருந்துகளிலும் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர்களை ஒட்டினர்.
நாம் தமிழர் கட்சியினர் பேருந்து நிலையத்திற்குள் முழக்கங்களை எழுப்பியவாறு சென்று பேருந்துகளில் ஸ்டிக்கர்களை ஒட்டியதால் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் இடையே சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இது குறித்து காவல்துறையினரிடம் ஏற்கனவே அனுமதி பெற்று இருந்ததால் கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

