கோவை: கோவை மத்திய சிறையில் வார்டனிடம் தகராறில் ஈடுபட்ட கைதிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மத்திய சிறையில் தண்டனை கதைிகள், விசாரணை கைதிகள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் குடும்பத்தினர், வக்கீல்களை சந்திப்பதற்கு முன்பும், சந்தித்த பின்னரும் கேட் வார்டனால் சோதனை செய்யப்படுவார்கள்.
கடந்த 22ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகள் உக்கடம் அன்பு நகரை சேர்ந்த அன்சாத் மீரன் குட்டி (39), தெற்கு உக்கடம் பொன்விழா நகரை சேர்ந்த ஜாபர் அலி (39), கிரின் கார்டன் பகுதியை சேர்ந்த அப்துல் முனாப் (39), கரும்புக்கடை சாரமேடு பகுதியை சேர்ந்த சதாம் உசைன் (36), மற்றும் சம்சுதீன் (39) ஆகியோரை அவர்களது வக்கீல்கள் சந்திக்க வந்துள்ளனர்.
அப்போது கேட் வார்டன் அன்சாத் மீரன் குட்டியை சோதனைக்கு உட்படுத்தினார். அப்போது அவர் வார்டனுக்கு ஒத்தழைக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதற்கு வார்டன் அனைவரும் சோதனைக்கு ஒத்தழைத்தாலே வக்கீல்களை சந்திக்க அனுமதிக்க முடியும் என்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அன்சாத் மீரன் குட்டி என்னை சோதனை செய்வதற்கு நீ யார் என தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அவருடன் சேர்ந்து மற்ற 4 கைதிகளும் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வார்டனை மிரட்டினர். இதுகுறித்து வார்டன் ஜெயிலர் சரவணக்குமாருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அன்சாத் மீரன் குட்டி, ஜாபர் அலி, அப்துல் முனாப், சதாம் உசைன், சம்சுதீன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

